Tuesday, June 28, 2011

விகடன் மேடை - எஸ்.ராமகிருஷ்ணன்


''ஈழப் போராட்டத்தின் வீழ்ச்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?''
''அதை வீழ்ச்சி என்று நான் ஒப்புக்கொள்கின்றவன் இல்லை. வாழ்வுரிமை பறிபோய், இன்றும் அகதிகளாக முகாமிலும் பல்வேறு தேசங்களிலும் நிர்க்கதியாக நிற்கும் மக்களின் கண்களில், பேச்சில், சிந்தனையில் ஈழப் போராட்டம் இருந்துகொண்டேதான் இருக்கிறது. இவ்வளவு பெரிய மனிதத் துயரத்தை வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த தமிழகச் சூழலைத்தான் மனிதாபிமானமற்றுப்போன வீழ்ச்சி என்று சொல்வேன்!''
பி.கீர்த்தனா, காரைப்பட்டி.
''தமிழில் நோபல் பரிசுக்குத் தகுதியான எழுத்தாளர் என்று யாரைச் சொல்வீர்கள்?''  
''கி.ராஜநாராயணன். அவர் ஓர் உன்னதமான கதை சொல்லி. மிகப் பெரிய இலக்கிய ஆளுமை. எளிய விவசாயியாக இடைசெவல் என்ற கிராமத்தில் வாழ்ந்து எழுதியவர். கிராம மக்களின் பேச்சுத் தமிழை இலக்கிய மொழியாக்கியவர். கரிசல் இலக்கியம் என்ற தனி வகையை உருவாக்கிய முன்னோடி. கிராமியக் கதைகள், பாடல்கள், சொலவடைகள், நாட்டுப்புற நம்பிக்கைகள் என்று தேடித் தேடிச் சேகரித்து, நமது வாழ்மொழி மரபைக் காப்பாற்றியவர். 
கரிசல் அகராதி என்று வட்டார வழக்கு அகராதியை உருவாக்கியவர். இடதுசாரி இயக்கங்களுடன் இணைந்து போராடிய விவசாயி. சங்கீத ஞானத்தில் விற்பன்னர். சங்கீத மேதை விளாத்திகுளம் சாமிகளின் சீடர். 50-க்கும் மேற்பட்ட கரிசல் வட்டார எழுத்தாளர்களை உருவாக்கியவர். இவரது 'கோபல்லபுர கிராமம்’ மிக முக்கியமான தமிழ் நாவல். எகிப்தின் நகுப் மக்பூஸ் (Naguib Mahfouz) நோபல் பரிசு பெற்றபோது, தமிழ் மொழியில் அவருக்கு நிகராக கி.ரா. இருக்கிறாரே என்று தோன்றியது. அந்த ஆதங்கம் எப்போதும் இருக்கிறது!''
ஏ.இசக்கி, வேலூர்.
''எத்தனையோ இசங்கள் இருக்கின்றன... அவற்றில் உங்களைக் கவர்ந்த இசம்?''
''கம்யூனிசம். எல்லா இசங்களும் அறிவாளி களுக்கானவை. கம்யூனிசம் ஒன்று மட்டுமே சாமான்ய மக்களின் நலனுக்கானது. இசங்கள்பற்றி சுந்தர ராமசாமி நீண்ட கவிதை எழுதிஇருக்கிறார். அதில் எனக்குப் பிடித்தமான வரிகள்...
'மேற்கே ரொமான்டிஸிஸம்
நேச்சரலிசம்
ரியலிசம்
அப்பால்
இம்ப்ரஷனிசம்
என் மனைவிக்குத்
தக்காளி ரசம்!’ ''
எல்.லட்சுமி, திருச்சி.
 ''இயக்குநர் பாலாவுடன் வேலை பார்த்த அனுபவம்?''
''ஒரு புத்தகம் எழுதும் அளவு நிறைய அனுபவம் பெற்றிருக்கிறேன். 'இவன்தான் பாலா’ என்று புத்தகம் வழியாகப் படித்து அறிந்த பாலாவுக்கும் பழகிப் பார்த்த பாலாவுக்கும் எந்த வேறுபாட்டையும் காண முடியவில்லை.
திறந்த புத்தகம்போலத் தன் மனதில் உள்ளதை வெளிப்படையாகப் பேசக் கூடியவர். நட்பை மதிக்கத் தெரிந்தவர். திறமையை அடையாளம் கண்டு கொண்டாடவும் மேம்படுத்தவும் கூடியவர். தான் நினைத்ததை சினிமாவில் காட்சிப்படுத்த 100 சதவிகிதம் முயற்சி செய்யும் பெர்ஃபெக்ஷனிஸ்ட். ஒருநாள் பாலாவைச் சந்திக்க எனது சிங்கப்பூர்  நண்பரை அழைத்துச் சென்றேன். அவர் பாலாவின் எளிமையை, வெளிப்படையாகத் தன்னையே கேலி செய்துகொள்ளும் பண்பைக் கண்டு, 'என்ன அண்ணே, பாலா இப்படி இருக்கிறார்!’ என்று வியந்து பேசினார். ஒன்றரை ஆண்டுகள் அவரோடு சேர்ந்து வேலை செய்தும், அந்த வியப்பு இன்றும் எனக்கும் இருக்கிறது. அதுதான் பாலா.
ஓர் இயக்குநர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு, பில்லி வைல்டர் என்ற அமெரிக்க இயக்குநர் சொன்ன பதில் இது:   A director must be a policeman, a midwife, a psycho analyst, a sycophant and a fool. இது பாலாவுக்கும் பொருந்தக்கூடியதே!''
கே.ஆனந்தன், திருத்தணி.
 '' 'எங்கள் பகல் உங்கள் இரவுகளைவிடக் கருமையானவை’ என்று பார்வையற்றவர்களின் உலகத்தைச் சொல்லும் புதினம் இதுவரை வந்துள்ளதா? விளக்கவும்?''
'' 'நிறங்களின் உலகம்’ என்று தேனிசீருடையான் ஒரு சிறந்த நாவலை எழுதிஇருக்கிறார். அவர் சிறு வயதில் பார்வைஇழந்து, அவதிப்பட்டு, பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளியில் பயின்றவர். பல ஆண்டுகளுக்குப் பிறகு, அறுவை சிகிச்சை செய்து, பார்வை கிடைத்திருக்கிறது. தனது இருண்ட வாழ்வனுபவத்தை அவர் ஒரு நாவலாக எழுதிஇருக்கிறார். மிக முக்கியமான நாவல் அது!''
ஆர்.சென்னகேசவன், ஈரோடு.
 ''அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் கலை - இலக்கியம் ஆரோக்கிய மாக இருக்கும் அளவுக்கு, தமிழகத்தில் இல்லை என்கிறார்கள் (சினிமா விதிவிலக்கு). உண்மையா?''
''உண்மையே! நாம் இலக்கியப் பெருமை பேசுகிறோமே தவிர, எழுத்தாளர்களுக்கு முக்கியத்துவம் தருவதே இல்லை. தமிழ்நாட்டில் அரசியல், சினிமா, கிரிக்கெட் - இந்த மூன்றுக்கும் தரப்படும் முக்கியத்துவம் வேறு எந்தத் துறைக்கும் தரப்படுவது இல்லை. காரணம், அதன் உடனடி பரபரப்புத்தன்மை. இலக்கியத்தையும் எழுத்தாளர்களையும் இரண்டாம்பட்சமாகவே நடத்துகிறார்கள். தமிழில் முதன்முறையாக நான் தாகூர் விருது வாங்கி இருக்கிறேன். இங்கு பெரும்பான்மை நாளிதழ்களில் அது செய்தியாகக்கூட வெளியாகவில்லை. ஆனால், அஸ்ஸாமிய எழுத்தாளர் அதே விருது வாங்கியது அங்கே முதல் பக்கச் செய்தி. அரசு அதற்காகப் பாராட்டு விழா நடத்துகிறது. கல்வி நிலையங் கள் அவரைக் கொண்டாடுகின்றன. இதே சூழல்தான் கேரளாவிலும் கர்நாடகாவிலும் இருக்கிறது.  அங்கே எழுத்தாளர்களை பப்ளிக் இன்டெலக்சுவல் என்று கருதுகிறார்கள். எல்லா முக்கியப் பிரச்னைகளிலும் கருத்து கேட்கிறார்கள், ஆலோசகர்களாக நியமிக்கிறார்கள். கேரளாவில் எழுத்தாளன்தான் தன் குழந்தையின் கையைப் பிடித்து அட்சரம் எழுதக் கற்றுத் தர வேண்டும் என்று மக்கள் வரிசையில் நிற்கிறார்கள். தமிழ்நாட்டில் எந்த எழுத்தாளருக்கும் இன்று வரை அந்த மரியாதை கிடைக்கவே இல்லை!''
பி.மூர்த்தி, திருச்செந்தூர்.
''இணையத்தின் பயன்பாடு அதிகமாகிவிட்ட சூழலில், புத்தகத்துக்கு என்று தனியாக இருக்கும் மதிப்பு குறைந்துவிடுமோ என்ற அச்சம் உங்களை எப்போதாவது சூழ்ந்து உள்ளதா?''
''ஒருபோதும் இல்லை. காரணம்,   இணையத்தின் வருகையால் தகவல்களைப் பெறுவது மட்டுமே எளிமையாகி இருக்கிறது. அதிலும், பெரும்பான்மை தகவல்களை நம்ப முடியவில்லை. பெரும்பான்மை வாசகர்கள் இன்றும் புத்தகங்களைத் தேடுகிறார்கள். இணையத்தால் புத்தகங்களின் முக்கியத்துவம் அதிகமாகிவிட்டது. நிறையப் புத்தகங்கள் விற்பனையாகின்றன. ஈபுக் ரீடர். ஐ-பேட், ஐ-போன் போன்ற உபகரணங்களில் காகிதம் இல்லாத புத்தகங்கள் பெருகி வருகின்றன. ஆனாலும், அச்சிடப்பட்ட புத்தகங்களுக்கான முக்கியத்துவம் அப்படியே இருக்கிறது.
10 கிராம் உள்ள டூத் பிரஷை என்னால்  ஐந்து நிமிடங்களுக்கு மேல் கையில் வைத்து இருக்க முடியாது. ஆனால், 'பொன்னியின் செல்வன்’ போன்ற ஆயிரம் பக்க நாவலை மணிக்கணக்கில் கையில் வைத்து, அதன் எடை பற்றிய கவனமே இல்லாமல் படிக்க முடிகிறதே, அதுதான் புத்தகத்தின் தனித்துவம். புத்தகம் என்பது வெறும் அச்சடிக்கப்பட்ட காகிதம் இல்லை. அது மனித வாழ்வின் அழியாத நினைவுத் திரட்டு. எல்லை அற்ற மனித அனுபவங்களை, நினைவுகளைத் தொகுத்து ஆவணப்படுத்தி வைத்திருப்பதே புத்தகங்களின் இருப்புக்கான முதற் காரணம். அது என்றும் மாறாதது!''
எம்.கிருஷ்ணமூர்த்தி, மதுரை.
 ''அண்ணா ஹஜாரே, ராம்தேவ் ஆகியோரின் போராட்டங்களை ஆதரிக்கிறீர்களா? இல்லை என்றால், ஏன்?''
அண்ணா ஹஜாரேவை ஆதரிக்கிறேன். அவர் ஒரு காந்தியவாதி. பல ஆண்டுகாலமாக மக்கள் சேவையில் இருப்பவர். ஆனால், பாபா ராம்தேவை ஆதரிக்கவில்லை. காரணம், அவர் ஒரு மதத் துறவி என்ற அடையாளத்தில் நடமாடும் ஆன்மிக வியாபாரி. 1,000 கோடி சொத்துள்ள ராம்தேவ் ஊழலை எதிர்க்க முன்வந்திருப்பது ஒரு சந்தர்ப்பவாத அரசியல். ஊழலுக்கு  முக்கியப் பிரச்னை, குறுக்கு வழியில்  பணம் சம்பாதிக்க நினைக்கும் பேராசை. இது அரசியல்வாதிகளுக்கு மட்டும் இல்லை, சாமான்ய மக்களுக்கும் இருக்கவே செய்கிறது. லஞ்சம்  வாங்குவதைத் தனது திறமை என்று  எண்ணும் மனப்பாங்கு நமக்குள் உருவாகி இருக்கிறது. குற்ற உணர்ச்சி இன்றி அதை நியாயப்படுத்துகிறோம். அந்தத் தொற்றுநோயின் முற்றிய நிலைதான் ஊழல். ஊழல் இன்று தேசிய அடையாளம்போல் ஆகிவிட்டது. அதற்கான எதிர்ப்பு உணர்வு ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் துவங்கப்பட வேண்டும். ஒவ்வொரு மனிதனும் ஊழலுக்கு எதிராக தான் என்ன செய்யப்போகிறோம் என்று யோசிக்கவும் செயல்படவும் வேண்டும். கடுமையான சட்டமும், சமூக அக்கறைகொண்ட ஊடகங்களும், மக்கள் சக்தியும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே இது சாத்தியம்!''
- அடுத்த வாரம்...

அட்டகாச ஜெயலலிதா.. அசத்தல் வைகோ!

ன்னை வெற்றி அடையச் செய்த ஸ்ரீரங்கம் தொகுதி மக்களுக்கு நன்றி சொல்வதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா மூன்று நாட்களும், ம.தி.மு.க. வழக்கறிஞர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வைகோ இரண்டு நாட்களும் திருச்சியில் தங்க... நகரமே திமிலோகப்பட்டது. 
ஜூன் 19 முதல் 21 வரையில் ஜெயலலிதா சங்கம் ஹோட்டலில் தங்கினார். 'ஆடம்பர வரவேற்புகள் கூடாது’ என்று முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப் பட்டதால், பிரமாண்ட கட்-அவுட்கள், ஃப்ளெக்ஸ் பேனர்கள் எதுவும் கண்ணில்படவில்லை. முதல்வர் வருகையை முன்னிட்டு சாலைகள் மணப் பெண்ணைப்போல் ஜொலிக்க... அதற்கு அழகு கூட்டுவதுபோல், கட்சிக் கொடிகள் இரு புறமும் காற்றில் படபடத்தன. திரும்பும் திசை எல்லாம் பாதுகாப்புக்கு போலீஸார் குவிக்கப்பட, ஆங்காங்கே கட்சிக்காரர்கள் 'அம்மா’ தரிசனத்துக்காக காத்துக் கிடந்தனர்.
முதல் நாள் ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சென்று அரங்கனை தரிசித்த ஜெய லலிதா, அன்று மாலை அரசு விழாவில் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட பகுதி களுக்கு, 190 கோடிகள் மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, மக்களை மலைக்க வைத்தார். அடுத்த இரண்டு நாட்களும் கிராமம் கிராமமாகச் சென்று மக்களுக்கு நன்றி தெரிவித் தார். முதியவர்கள் நின்றால், வாகனத்தை நிறுத்தி அவர்கள் கொடுக்கும் மனுக்களை முதல்வர் பெற்றுக்கொண்டார். பேசத் திட்டமிடாத இடங்களிலும் மக்கள் கூட்டமாக நின்றால், வாக னத்தை நிறுத்திப் பேசினார்.
முதல்வரின் கொண்டாட்டக் களேபரம் முடிய... ஜூன் 25-ம் தேதி, ம.தி.மு.க. வழக்கறிஞர்கள் மாநாட்டுக்காக தயாராகத் தொடங்கியது திருச்சி. அ.தி.மு.க-வினர் விட்டுவைத்து இருந்த மிச்சம் மீதி இடங் களில் ம.தி.மு.க-வினர் தங்கள் கட்சிக் கொடிகளைக் கட்டி வைத்தனர். முந்தைய தினமே பல்வேறு ஊர்களில் இருந்து வந்த வழக்கறிஞர்கள், நகரின் வீதிகளில் உலா வரத் துவங்கினர்.
ஒரு நாள் முன்னதாக வந்து விட்ட வைகோவும், திருச்சியின் பல்வேறு இடங்களில், கட்சியின் 18-ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கட்சி கொடி ஏற்றி, பள்ளிக் குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங் கினார். லால்குடி ஒன்றியச் செயலாளர் மைக்கேல் ராஜ் மகள் மேரி ராஜ ஷீலாவுக்கு 26-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருமணம். எனவே, மணமக் களை முன்கூட்டியே வாழ்த்திச் சென்றார். அடுத்த நாள் வழக் கறிஞர்கள் மாநாட்டில் காலை முதல் இரவு வரை கலந்து கொண்டு இரவு திருச்சியில் இருந்து கிளம்பினார்.
இந்த நேரத்தில், 'கட்சிப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க ஒரு நாள் பயணமாக தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வருகிறார்’ என்று அறிவிக்கப் படவே, 'இரண்டு கழகங்களையும் மிஞ்சும் வகையில் திருச்சியை திக்கு முக்காட வைக்கிறோம்’ என்று சவால்விட்டனர் தி.மு.க. தொண்டர்கள். ஆனால் ஸ்டாலின் வருகை திடீரென ரத்தாகவே, அவர்கள் சோக மாகிப் போனது தனி டிராக்!

சமம் இல்லாத கல்வி சமச்சீர்க் கல்வி ஆகுமா?



ஜோதிமணி
மச்சீர் கல்வி பற்றிய சர்ச்சைகள் தமிழகத்தில் தூள் பறக்கிறது! 'அது தேவையா, இல்லையா... நடைமுறைப்படுத்தப்படுமா, படாதா... புத்தகங்கள் அச்ச​டிக்கச் செலவான 200 கோடிக்கு யார் பொறுப்பு...அந்தப் பாடத் திட்டம் உண்மை​யாகவே சமச்சீர் கல்விக்கு உத்தரவாதமானதா... சென்ற அரசின் திட்டங்களில் ஒன்றான இதை, இந்த அரசைத் தொடரச் சொல்லி வற்புறுத்துவது நியாயமா?'' - இப்படி ஏகப்பட்ட கேள்விகள்!
ஆனால், இந்த மேலோட்டமான விவாதங்களில் எல்லாம் உண்மையான சமச்சீர் கல்வி அமிழ்ந்து, ஆழப் போய்விட்டதே நிஜம்! எது சமச்சீர் கல்வி? அது எந்த வகையில் தேவை?
முதலில், பள்ளிகள். அடிப்படை வசதிகள் இல்லாத, எட்டாம் வகுப்பிலும் எழுத்துக் கூட்டிப் படிக்கிற நிலையில் மாணவர்களை வைத்திருக்கிற, சரியான கழிப்பறைகளோ, விளையாட்டு மைதானங்களோ இல்லாத, அதன் அவசியத்தைக்கூட உணராத, 'வேறு கதியற்ற கடைக்கோடி மக்களின் கனவுகளுக்கு ஒரே புகலிடம்’ என்ற அளவில் மட்டுமே உயிர்த்திருக்கும் அரசுப் பள்ளிகள் ஒரு புறம்...
எவ்வித விதிகளுக்கும் உட்படாமல் அலட்சியப்​படுத்தி, முறையான கட்டடங்களோ, தகுதியான ஆசிரியர்களோ இல்லாத, அப்படி இருந்தாலும் அவர்களை ஈவிரக்கம் இல்லாமல் சுரண்டுகிற, புற்றீசல்போல் பெருகும் ஆங்கிலப் பள்ளிகள் மறு புறம்!
பள்ளி வளாகத்தில் தாய்மொழியில் பேசினாலே அபராதம் விதிக்கிற, 10, 12-ம் வகுப்புப் பாடங்களை 8-ம் வகுப்பில் இருந்தே சொல்லித்தருகிற அதீதப் பொறுப்பு உணர்வு மிகுந்த, அதற்கு விலையாகப் பெற்றோர்களின் ரத்தத்தையே உறிஞ்சுகிற ஆங்கில மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இன்னொரு புறம்!
இதுதான் இன்றைய தமிழகம்!
கல்வி பற்றிய ஏராளமான கனவுகளோடு நம்​முடைய குழந்தைகள் வளர்கிறார்கள். அந்தக் கனவுகள்தான் நாளை நம் தேசத்தை வழிநடத்தப்​போகிறது. அவர்களுக்குப் பள்ளிகளின் இன்றைய நிலை பெரும் ஏமாற்றமே. உண்மை இப்படி இருக்க, 'பாடத் திட்டத்தை மாற்றுவதால் மட்டுமே சமச்சீரான கல்வியைக் கொண்டுவந்துவிட முடியுமா?’ என்பதுதான் இன்று தலைதூக்கும் அடிப்​படையான கேள்வி.
தரமான, தொலைநோக்குப் பார்வைகொண்ட, வேகமாக மாறி வரும் காலத்துக்கு ஈடுகொடுக்கக்கூடிய, அறிவியல்பூர்வமான, நமது தாய்மொழி - பாரம்பரியத்தை அடிப்படையாகக்கொண்ட, அனை​வருக்கும் சம வாய்ப்பு வழங்குகிற ஒரு கல்விக் கொள்கைதான் இன்றைய முதல் தேவை. அதுதான் முழுமையான சமச்சீர்க் கல்வியாக இருக்க முடியும். அப்படிப்பட்ட கல்வியைக் கொண்டுவந்தார்களா என்றால் இல்லை!
கல்வி, சமூக முன்னேற்றத்தின் முக்கியஅங்கம். தலித்துகள், பெண்கள், மலை சாதியினர் மற்றும் ஒடுக்கப்பட்ட அனைத்துப் பிரிவினரின் முன்னேற்​றமும், தரமான கல்வியின் மூலம்தான் சாத்தியம். அதை இலவசமாகப் பெறுவது, அனைவரது உரிமை. அதைத் தருவதுதான் அரசின் கடமை!
பெருந்தலைவர் காமராஜர் இதை நன்கு உணர்ந்து, தொலைநோக்குப் பார்வையோடு இலவசக் கல்விக்கு அடிப்படையான ஆரம்பப் பள்ளிகளைத் திறந்தார். கல்விக்கு வறுமையும் பசியும்கூட தடைஎன்பதை உணர்ந்து, மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு​வந்தார்.
அன்றும் தனியார் பள்ளிகள் இருந்தன. ஆனால், கல்வியை வியாபாரமாக மாற அனுமதிக்கவில்லை. பணப் புழக்கம் அதிகம் இல்லாத அன்றைய சூழலில், தரமான கல்வி இலவசமாக வழங்கப்பட்டது. அன்றைய தனியார் பள்ளிகளும் சமூகத்துக்கான அறப் பணியாகவே திகழ்ந்தன.
துரதிர்ஷ்டவசமாக, அடுத்தடுத்து வந்த அரசுகள் கல்வி வியாபாரமாக மாறியதைத் தடுக்கத் தவறி​விட்டன, நியாயமான கட்டுப்பாடுகளையும் விதிக்க​வில்லை. மேலும், அரசுப் பள்ளிகளில் கவனம் செலுத்தாமல், அதன் தரம் நாளுக்கு நாள் குறைந்து வந்ததையும் தடுக்கவில்லை. அதனால்தான் இன்று, எப்பாடு பட்டாவது தன் குழந்தைகளை நன்கு படிக்கவைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிற பெற்றோர், இரக்கமற்ற தனியார் பள்ளிகளிடம் சிக்கிக் கண்ணீர் சிந்துகின்றனர்!
அதற்கும் வழி இல்லாத பெற்றோர்கள்தான் அரசுப் பள்ளியை அண்டுகிறார்கள். இப்படி, வசதியானவர்கள் மட்டுமே தரமான கல்வியையும், நல்ல வேலை வாய்ப்பையும் பெற முடியும் என்பது அநீதியானது, ஆபத்தானது!
இந்த நிலையை மாற்ற, உடனடி முயற்சி எடுத்தே ஆக வேண்டும். இப்போதைக்கு பாடத் திட்டத்தையாவது மாற்றுவோம் என்கிற சமாதானம், நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வது ஆகும். மற்ற சீரழிவுகளை எப்போது மாற்றுவது? முத்துக்குமரன் கமிட்டி அறிக்கையில் குறிப்பிட்​டுள்ள மற்ற சீர்திருத்தங்களையும் உடனடியாகப் பரிசீலித்து அமல்படுத்த வேண்டும். குறிப்பாக, பள்ளிக் கட்டணம் முறைப்படுத்தப்பட வேண்டும். இதற்கு எதிராகச் சொல்லப்படுகிற எந்த சமாதானமும் ஏற்கக்கூடியது அல்ல.
கல்வி, தனி மனித வாழ்விலும் சமூகத்தின் முன்னேற்றத்திலும் மிக முக்கியமான ஒரு காரணி. அதில் அரசியல் மாச்சரியங்களுக்கு எந்த இடமும் இருக்கக் கூடாது. அரசியலுக்கு அப்பாற்பட்டு, அரசும் அனைத்துக் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் ஒன்று சேர்ந்து, ஒரு புதிய கல்விக் கொள்கையை ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் உருவாக்குவதும், செயல்​படுத்துவதும் இந்தத் தருணத்தில் மிகவும் முக்கியம். இதில் மேலும் ஏற்படுகிற தாமதம், மக்களுக்குக் கஷ்டத்தையும் நெருக்கடியையும் ஏற்படுத்துவதோடு, சமூகத்தில் மோசமான பின்விளைவுகளையும் ஏற்படுத்திவிடும்.
நல்லோர் எல்லோர் கவனத்துக்கும்!

இந்தத் தோல்விக்காக ஜெயலலிதாவுக்கு நன்றி..

ட்டப் பேரவை தேர்தல் தோல்விக்குப் பிறகு நடந்த தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக்குழுவின் தீர்மானங்களை, விளக்குவதற்குப் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகிறது. காஞ்சிபுரத்தில் நடந்த கூட்டத்தில், தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் கலந்து கொண் டார். 
அன்பழகனுக்கு முன் பேசிய கம்பம் செல்வேந்திரன் சீரியஸாகவே தொடங்கினார். தி.மு.க-வுக்கு வெற்றியும் தோல்வியும் சகஜம் என்ற ரீதியில் பேசிய அவர், ''67-ம் ஆண்டு நடந்த தேர்தல் ஓட்டு எண்ணிக்கைக்கு முன்தினமே, காமராஜரை சந்தித்து மாலை அணிவித்து வாழ்த்துச் சொன்னார், காவல் துறை அதிகாரி ஒருவர். 'எதுக்கு அவசரம் ஒரு நாள் பொறுக்கக்கூடாதான்னேன்?’ என்று காமராஜர் அவரைக் கடிந்து கொள்ள... அதற்கு அந்த அதிகாரி மிகுந்த நம்பிக்கையுடன், 'நாளைக்கு மதியம் நீங்க பிஸியாயிடுவீங்க அதான்...’ என்றார்.
ஆனால், அடுத்த நாள் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. தி.மு.க. ஆட்சியைப் பிடித்து விட்டது!'' என்றார் செல்வேந்திரன்.
சுவாரஸ்யமாக இதைக் கேட்டுக்கொண்டு இருந்த அன்பழகன் குறுக்கே புகுந்து, ''அந்த அதிகாரி பேரைச் சொல்லுய்யா...'' என்றார். ஆனால், அந்த போலீஸ் அதிகாரியின் பெயர் தெரியாமல் முழித்த செல்வேந்திரன், ''அருளா?'' என்று பேராசிரியரிடமே கேட்டார். இல்லை என்று அன்பழகன் தலையாட்ட... சங்கடப்பட்ட செல்வேந்திரன், ''மகாதேவன் தானே...'' என்று மீண்டும் ஒரு கேள்வியை பேராசிரியர் முன் வைத்தார். அதற்குமேல் அவரை சங்கடப்படுத்த விரும்பாத அன்பழகன், ''ஐ.ஜி. பார்த்தசாரதி'' என்று சொல்ல... தொண்டர்களிடம் இருந்து பலத்த கைதட்டல்.
கம்பம் செல்வேந்திரனுக்குப் பிறகு மைக் பிடித்த அன்பழகன், ''தமிழகம் முழுக்க ஏற்பட்ட தோல்வியைக்கூட நான் ஏத்துக்கிட்டேன். ஆனால், காஞ்சியில் அடைந்த தோல்வியை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. பொதுவாக, நம்ம கட்சியில ஏரியாவுக்கு ஒரு தளபதிதான் இருப்பாங்க. ஆனா, காஞ்சிபுரத்தில் எண்ணிலடங்காத தளபதிங்க. தேர்தலப்போ மத்த தொகுதியைவிட இங்கிருந்துதான் அதிகம் மனுக்கள் வரும். கடைசியில கோட்டை விட்டுட்டீங்களே...'' என்று சற்றே நிறுத்தி ஆதங்கப்பட்ட அன்பழகன், ''இந்தத் தோல்வியை ஒரு வகையில் நல்லது என்பேன்...'' என்று சொல்லவே, தொண்டர்கள் சற்று மிரண்டனர். ''நம்மைப் பொறுத்த வரை தோல்வி அடையும்போதுதான் நம்மிடம் ஒற்றுமை தென்படும். வெற்றி அடையும்போது பிரிஞ்சு போயிடுறோம். வெற்றி நம்மைப் பிரிக் கிறது, தோல்வி நம்மை இணைக்கிறது!'' என்று விளக்கிய அன்பழகன், ''அண்ணா தோற்றபோது நான்கூட கவலைப்பட்டேன். ஆனால், அது நல்லதாகப் போய்விட்டது. தோற்றதால்தான் அவர் நாடாளுமன்றத்துக்குச் சென்றார். தி.மு.க. கொள்கைகள் இந்திய அளவில் சென்று சேர்ந்தது. அண்ணாவின் திறமையை அறிந்த ராம் மனோகர் லோகியா என்ற முதுபெரும் தலைவர் என்னிடம் ஒரு முறை, 'உங்க அண்ணாவை குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் நிற்கச் சொல்லுங்க!’ என்றார். அண்ணாவிடம் இதைச் சொன்னபோது சிரித்துக்கொண்டே 'இதுக்குதான்யா டெல்லி போகமாட்டேன்னேன். இன்னும் என்னை எங்கெங்கே போகச் சொல்வீங்களோ?’ என்று அண்ணா சொன்னார்'' என்று வரலாற்றின் பக்கங்களைத் திருப்பிய அன்பழகன்...
பின்னர், திராவிடர் - ஆரியர் பிரச்னைக்கு வந்தார். ''நாம எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் வைதீக அகராதியில சூத்திரர்கள்தான். ஒவ்வொரு இனமும் எங்கெங்கே பிறந்தவங்கன்னு பிராமணன் வகுத்து வெச்சிருக்கான். தொடை, பாதம்ன்னு கண்ட கண்ட இடங்களைச் சொல்வாங்க. இவனுங்க எங்கேடா பிறந்தாங்கன்னு கேட்டா, நாங்க எல்லாம் ஒரிஜினல் ப்ளேஸ்லதான் பிறந்தோம்ங்கறான்'' என்றபோது பேசுவது பேராசிரியர்தானா? என்று மேடையில் இருந்தவர்களே கிள்ளிப்பார்க்கும் நிலைக்குப் போனார்கள்.
பத்திரிகைகளையும் ஒரு பிடி பிடிக்கத் தவறவில்லை அன்பழகன். ''உண்மையில் இது ஜெயலலிதாவுக்கு கிடைத்த வெற்றி என்று சொன்னால் நான் நம்ப மாட்டேன். ஜெயலலிதா வெறும் அம்பு மட்டும்தான். வெற்றி பெற்றிருப்பது 'துக்ளக்’ சோவும் 'தினமணி’ வைத்தியநாதனும்தான். நாம் இலவசங்களைத் தந்தபோது மக்கள் வரிப்பணம் வீணாகுதுன்னு மூக்கை சிந்தினவங்க எல்லாம் இப்போ, அம்மா அறிவிச்சதை எல்லாம் நான்கு மாதத்தில் தந்திடுவாங்க... ஆறு மாதத்தில தந்திடுவாங்கன்னு பக்கம் பக்கமா ஜோசியம் எழுதிக்கிட்டு இருக்காங்க. கண்டிப்பா கொடுப்பாங்க அம்மா... அம்மா தராம விட்டுட்டாலும் இவங்க அதை வாங்கித் தந்திடுவாங்க போல இருக்கு. தி.மு.க., தேர்தல் அரசியலை நோக்கி இயங்கும் கட்சியல்ல. இது சமூக நீதிக்கான ஓர் இயக்கம். பகுத்தறிவு இயக்கம். ஒரு வகையில் இந்த தோல்விக்காக நாம் ஜெயலலிதாவுக்கு நன்றி சொல்ல வேண்டும். காரணம், இப்போதுதான் நாம் மக்களுக்கு முழுநேர சேவை செய்யும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மக்களை மயக்கியதால் கிடைத்த வெற்றி இது. அந்த மயக்கத்தைப் போக்கும் விதத்தில் இனி நம் பணி இருக்க வேண்டும்!'' என்று வேண்டுகோளோடு தனது பேச்சை முடித்துக் கொண்டார் அன்பழகன்.
தோல்விக்கு ஆறுதல் சொல்கிறாரா அல்லது நையாண்டி செய்கிறாரா என்று புரியாமலே உடன்பிறப்புகள் கலைந்து சென்றார்கள்.
- கிருபாகரன்

பாபா அறக்கட்டளையில் தகிடுதத்தங்கள்!''

பாபா அறக்கட்டளையில் தகிடுதத்தங்கள்!''
ஜூலை 15-ல் மர்மம் அவிழ்ப்பாரா ஐசக் டிக்ரீட்?
'நம்பிக்கையை வளர்த்துக்​கொள்ளுங்கள். வெளி உலக வாழ்வில் எத்தனையோ சூழ்நிலைகள் நம்மைப் பாதிக்கின்றன. அந்தச் சூழ்நிலைகள் நம்மைத் தாக்காதபடி, நம்பிக்கையே கவசம்போல பாதுகாக்கும். சோதனைகளையும், விரும்பி ஏற்கும் பக்குவத்​தையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்’ - தன் பக்தர்களுக்கு ஸ்ரீசத்ய சாயி​பாபா அடிக்கடி சொல்லி வந்த அருள்வாக்கு  இது. அவரது மறைவுக்குப் பிறகு ஆசிரமத்துக்கு வந்திருக்கும் சோதனைகளை, யாருடைய நம்பிக்கை காப்பாற்றும் என்பதுதான் இப்போதையை கேள்வி.
புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் சாயி​பாபா தங்கி இருந்த யஜுர் மந்திர் அறையில் கோடிக்கணக்கில் பணமும், கிலோ கணக்கில் தங்கமும், வெள்ளியும் எடுக்கப்பட்டு பரபரப்பு கிளம்பியது. அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள், கூடுதலாக அதிர்ச்சி அளிக்கின்றன!
ஸ்ரீசத்ய சாயி அறக்கட்டளைக்கு சொந்தமான காரை சோதனைச் சாவடியில் பெங்களூரு போலீஸார் சோதனை நடத்தியபோது, மூட்டை மூட்டையாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. காரில் பயணம் செய்த அறக்கட்டளை உறுப்பினரின் கார் டிரைவர் மற்றும் பாபாவின் சமாதியை வடிவமைக்கும் இன்ஜினீயர்கள் ஹரீஷ் நந்தா ஷெட்டி, சுகான் ஷெட்டி ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, பணம் முழுக்க பிரசாந்தி நிலையத்தில் அறை எண் 6-ல் இருந்துகொண்டு வரப்பட்டதாக தகவல் சொல்லி இருக்கிறார்கள். அந்த அறையில் தங்கி இருந்தது, பாபாவின் சொந்த சகோதரர் மகனும், அறக்கட்டளையின் தலைவருமான ஆர்.ஜே.ரத்னாகர்.
இதைத் தொடர்ந்து பாபா அறக்கட்டளைக்குச் சொந்தமான ஆம்னி பஸ் ஒன்றையும் போலீஸார் சோதனையிட, அதிலும் 10 கோடி பணம் சிக்கியது.
புட்டபர்த்தியில் கடை வைத்திருக்கும் கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவரிடம் பேசினோம். ''பாபாவோட மறைவுக்குப் பிறகு ஆசிரமத்தில் நடக்கும் எல்லா விஷயங்களும் மர்மமா இருக்கு. அதேபோல, இங்கே வரும் பக்தர்களின் கூட்டமும் இப்போது சுத்தமா நின்னுடுச்சு. தெருக்கள் வெறிச்சோடிக்கிடக்குது. கடையில் ஒரு நாளைக்கு 100-க்குக்கூட வியாபரம் இல்லை. கடையை மூடிட்டு வேற ஊருக்கு கிளம்பலாம்னு முடிவுக்கு வந்திருக்கோம்...'' என்றவர், ''பாபா இறந்த நாளில் இருந்தே ஆசிரமத்தில் இருந்து ஏகப்பட்ட லாரிகளும், பஸ்களும் வெளியில் போயிட்டே இருந்தன. அவற்றில் பணம்தான் கடத்தி இருப்பாங்கன்னு எங்களுக்கு சந்தேகமா இருக்கு.
வெளி ஆட்கள் யாரும் ஆசிரமத்துக்குள் நுழைஞ்சு ஒரு துரும்பைக்கூட எடுத்துக்கிட்டுப் போக முடியாது. எல்லாமே உள்ளே இருக்கும் சில ஆட்களோட துணையோடுதான் நடந்துட்டு இருக்கு. திருப்பதிபோலவே பிரசாந்தி நிலையத்தையும் ஒரு தேவஸ்தான அமைப்பின் கீழ் கொண்டுவர அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!'' என்று கோரிக்கை வைத்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக ஆர்.ஜே.ரத்னாகர், ''காரிலும் பஸ்ஸிலும் கொண்டுபோன பணம் பக்தர்களுடையது. அதற்கும், ஆசிரமத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பறிமுதல் செய்யப்பட்ட பணம் நீதிமன்றத்தில் இருக்கிறது. அதைப்பற்றி விசாரணை நடக்கிறது. ஆசிரம உறுப்பினர்கள் இங்கு இருந்து கோடிக்கணக்கில் பணத்தைக் கடத்துவதைப்போல சிலர் குற்றம் சாட்டுகிறார்கள். அதில் துளிகூட உண்மை இல்லை. நாங்கள் அனைவருமே பாபாவுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள்!'' என்கிறார் உருக்கமாக.
அமெரிக்க கோடீஸ்வரர் என்று அடையாளம் காட்டப்பட்ட பாபாவின் தீவிர பக்தரான ஐசக் டிக்ரீட் என்பவர், ''பாபா அறக்கட்டளையில் நடக்கும் தகிடுதத்தங்கள் பற்றிய திடுக்கிடும் உண்மைகள் அத்தனையும் ஆதாரத்தோடு என் கையில் இருக்கின்றன. ஜூலை 15-ம் தேதி குரு பூர்ணிமா அன்று மீடியாக்கள் முன்னிலையில் அத்த​னையும் பகிரங்கப்படுத்துவேன். அப்போது பலரது முகத் திரைகள் கிழியும்!'' என்று மிரட்டி இருக்கிறார்.
ஆந்திர அரசியல் தலைவர்களின் பார்வையும் பாபா ஆசிரமத்தின் மீது ஆழப் பதிந்திருக்கிறது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, ஆசிரமத்துக்கு திடீரென சென்று, ரத்னாகருடன் பேசி, தனது ஆதரவுக் கரத்தை நீட்டிவிட்டு வந்தார். தெலுங்கு தேசம் கட்சியோ, 'பாபாவின் ஆசிரமத்தை அரசாங்கம் கைப்பற்ற வேண்டும். சொத்துகள் பற்றி விசாரணை நடத்த தனி விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்!’ என கோரிக்கை வைத்திருக்கிறது.
ஆந்திர முதல்வர் கிரண்குமார், தலைமைச் செயலாளர் மற்றும் வருமான வரித் துறை அதிகாரிகளுடன் திடீர் ஆலோசனை நடத்தி இருக்கிறார். சாயி பாபா ஆசிரமத்துக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த 16 முக்கிய சலுகைகளை உடனடியாக ரத்து செய்ய ஆந்திர அரசு முடிவு எடுத்திருக்கிறதாம்.
'வாழும் காலத்திலேயே வாயில் இருந்து லிங்கம்... கையில் இருந்து விபூதி...’ என சர்ச்சைகளையும் புகழையும் மாறி மாறி அடைந்தவர் சாயி பாபா. அவர் இறந்த பிறகும் தொடரும் சர்ச்சைகள் எப்போது முடிவுக்கு வரும் என்பதற்குத்தான் விடை தெரியவில்லை!
- கே.ராஜாதிருவேங்கடம்

கொந்தளித்த ஆ.ராசாவின் மனைவி!

கொந்தளித்த ஆ.ராசாவின் மனைவி!

''அவரைப்பத்தி இஷ்டத்துக்கு எழுதி உள்ளே தள்ளிட்டீங்களே!''
டெல்லி திகார் சிறை வட்டாரத்தில் உலா வந்த ஆ.ராசாவின்உறவுக் காரர்களை, திருச்சி வருமான வரித் துறை விசாரணைக்காக அழைத்தது!
ஜூன் 24-ம் தேதி, காலை 10.35-க்கு ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி, ஆ.ராசாவின் சகோதரர் ராமச்சந்திரன், அக்கா மகள் வித்யா, அக்கா மகன்கள் பரமேஸ்வரன், வெங்கடேசன் ஆகியோர் இரண்டு கார்களில் வந்து இறங்கினர். அவர்களைச் சூழ்ந்து பளிச் பளிச்சென ப்ளாஷ் அடிக்க... இத்தனை மீடியாக்களை எதிர்பாராத அவர்கள், அதிர்ச்சி அடைந்தனர். ''அவரைப் பத்தித்தான் இஷ்டத்துக்கும் எழுதி ஜெயிலுக்கு அனுப்பிட்டீங்க... அப்புறம் இன்னும் ஏன் எங்களைத் தொல்லை பண்றீங்க?'' என்று சீறியபடி, அலுவலகத்தின் உள்ளே சென்றார் பரமேஸ்வரி.
அடுத்து வந்த ராமச்சந்திரனை சூழ்ந்து​கொண்ட நிருபர்கள், ''எதற்காக ஆஜராகச் சொல்லி உத்தரவு வந்துள்ளது? யார் யார் ஆஜர் ஆகிறீர்கள்?'' என்று கேட்க, ''உங்களுக்கு யார் தகவல் சொன்னார்களோ, அவர்களிடமே போய் விசாரித்துக்கொள்ளுங்கள்!'' என்று முறைத்தார்.
சற்று நேரத்துக்குப் பின்னர் அவர்களுடன் வந்த ஆடிட்டர்கள், ''வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ததில் சில சந்தேகங்கள் என்று பரமேஸ்வரியையும் ராமச்சந்திரனையும் வரச் சொல்லி இருக்கிறார்கள். சந்தேகங்களை நிவர்த்தி செய்ய தினந்தோறும் நூற்றுக்கணக்கானோரை வருமான வரித் துறையினர் வரச் சொல்லி விசாரிப்பது சாதாரண விஷயம்தான்...'' என்று விளக்கம் சொன்னார்கள்.
பரமேஸ்வரி விசாரணைக்காகச் சென்ற சிறிது நேரத்திலேயே, வித்யாவும் வெங்கடேசனும் காரில் ஏறி புறப்பட்டுச் சென்றனர். பரமேஸ்வரியிடம் மதியம் வரையும், ராமச்சந்திரனிடம் மாலை வரையும் விசாரணை நடந்தது. 
இது தொடர்பாக விவரம் அறிந்த வட்டாரத்தில் பேசியபோது, ''இருவரிடமும் வருமானத்துக்கு அதிகமான சொத்துகள் இருக்கின்றன. ஆகவே, அவர்களிடம் ஆரம்பத்தில் விசாரணை நடத்தப்பட்டது. ஆ.ராசா கைதுக்கு முன்னர், பெரம்பலூர் மற்றும் திருச்சியில் அவரது சகோதர, சகோதரிகள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் புகுந்து ரெய்டு நடத்திய சி.பி.ஐ. டீம், பல முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றிச் சென்றது. சொத்துகள் வாங்குவதற்கான வருமானம் எப்படிக் கிடைத்தது என்பது குறித்தும் விசாரணை நடந்தது. பரமேஸ்வரி மற்றும் ராமச்சந்திரன் சொன்ன பதில்களில் விசாரணை அதிகாரிகளுக்கு முழுத் திருப்தி ஏற்பட்டதாகத் தெரியவில்லை. விரைவில் மற்ற உறவுகளையும் அதிகாரிகள் விசாரணைக்கு அழைப்பார்கள்!'' என்றனர்.
இதுகுறித்து நாம் ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரியின் செல்போனில் தொடர்பு கொண்டோம். அது, ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. திருச்சியில் இருக்கும் ராசாவின் சகோதரர் கலியபெருமாளிடம் பேசினோம். ''உங்களிடம் பரமேஸ்வரி எதுவும் பேசமாட்டார். எங்கள் கருத்தையும் சொல்ல விரும்பவில்லை!'' என்று கூறினார்.
- ஆர்.லோகநாதன்
படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்
வருமான வரித் துறை அலுவலகத்துக்கு வந்திருந்த ஆ.ராசாவின் குடும்ப உறுப்பினர்களைப்பற்றி சிறு குறிப்புகள்.
பரமேஸ்வரி: ஆ.ராசாவின் மனைவி. சாதிக் பாட்சா நிர்வாக இயக்குநராக இருந்த க்ரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில், அதன் டைரக்டர் பொறுப்பில் இருந்தார். பின்னர் விலகிவிட்டார்.
ராமச்சந்திரன்: ஆ.ராசாவின் குடும்பத்தில் மூத்த ஆண். ஐ.எஃப்.எஸ். அதிகாரியான இவர், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பணியாற்றி இருக்கிறார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பருவநிலை மாற்றத் துறையின் இயக்குநராகப் பணியாற்றுகிறார்.
பரமேஸ்வரன்: ஆ.ராசாவின் மூத்த அக்காள் விஜயாவின் மகன். அம்மா விஜயா, அப்பா பச்சைமுத்து இருவரும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள். க்ரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனத்தில் சாதிக் பாட்சா எம்.டி-யாக இருந்தபோது, இவர் ஜே.எம்.டி. பொறுப்பில் இருந்தார். சாதிக் பாட்சாவின் மறைவுக்குப் பின்னர் இவர்தான் எம்.டி. சாதிக்பாட்சா தரப்பில் சுப்புடு என்கிற சுப்பிரமணியனுக்கும் முக்கியப் பொறுப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. செக்கில் கையெழுத்துப் போடும் அதிகாரம் இந்த இருவருக்கும்தான். இது வரை 2ஜி ஸ்பெக்டரம் விவகாரத்தில் பரமேஸ்வரன் விசாரிக்கப்படாமல் இருப்பது, விவரம் அறிந்தவர்கள் வட்டாரத்தில் ஆச்சர்யமாக விவாதிக்கப்படுகிறது.
வித்யா: ஆ.ராசாவின் சகோதரி கமலாவின் மகள். தந்தை அரங்கராஜன், கிராம நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். எம்.சி.ஏ. பட்டதாரியான இவர் சென்னையில் சி.டாக் என்ற ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிகிறார். இது பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்குத் தேவையான மென்​பொருட்களை உற்பத்தி செய்து தருகிறது.
வெங்கடேசன்: ஆ.ராசாவின் சகோதரி சரோஜாவின் மகன். பி.எஸ்.என்.எல். நிறுவன திருச்சி மண்டல அலுவலகத்தில் அக்கவுன்ட் ஆபீஸராகப் பணியாற்றுகிறார். ஆ.ராசா அமைச்சராக இருந்தபோது, இரண்டு வருட காலமாக டெலிகாம் டிபார்ட்மென்டில் அசிஸ்டென்ட் பிரைவேட் செக்ரெட்​டரியாக டெல்லியில் பணியாற்றினார்.

கனிமொழி அப்பாவி!''


நந்தி சாமியாக மாறிய அதிபன் போஸ்
முழங்கால் அளவுக்கு காவி... மிடுக்கு குறைந்த முகம்... அசட்டை​யான சிரிப்பு... ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த தொழில் அதிபர் அதிபன் போஸா இவர்? கனிமொழி​யுடன் திருமணம், விவா​கரத்து என பரபரப்புப் புள்ளியாக இருந்த அதிபன், இப்போது ஆன்மிக அவதாரம் எடுத்து இருக்கிறார். சித்தர் குரு அய்யாவின் அடியவராகத் தன்னைச் சொல்லிக்கொள்ளும் அதிபன் போஸ், அவருடைய மந்திரங்களைப் பாடல்களாக்கி சி.டி-யாக வெளியிட்டு இருக்கிறார்.
நந்தி சாமியாக தன்னை மாற்றிக்கொண்ட அதிபன் போஸிடம், ''என்ன, இப்படி மாறிட்டீங்க?'' எனக் கேட்டோம்.
''மாற்றம்கிறது நல்ல விஷயம்தானே... இதில் அனுதாபப்பட என்ன இருக்கு? நாம மட்டும் இல்லை... இந்த மரம், மண் எல்லாமே மாறிட்டுத்தான் இருக்கு. 'எல்லாம் நிரந்தரம்’னு நாம கற்பனை பண்ணிட்டு அலையுறோம். ஒரு கட்டத்தில் அந்த நினைப்பு தவிடுபொடியாகிடுது; வாழ்க்கையோட உண்மை புரியுது. இந்த அதிபன் மாறியதும் அப்படித்தான்!'' என்றபடி பலமாகச் சிரிக்கிறார்.
''இந்த ஒலிநாடா மூலமாக என்ன சொல்லப்​போகிறீர்கள்?''
''மனிதத்தன்மை உள்ளவங்க இந்த உலகுக்கு ஏதாவது செய்யணும். நம்மை நாமே உணர்ந்துகொள்ளும் பக்குவத்தை இந்தப் பாடல்கள் உணர்த்தும். குரு பூர்ணிமா நேரத்தில் பாடப்பட்ட இந்தப் பாடல்கள் 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சித்தர்களின் சிந்தையில் உதித்தவை.''
''கனிமொழி வழக்கைக் கவனிக்கிறீர்களா?''
''கனிமொழி நல்லவங்க. எதை செய்யும்போதும் ஜாக்கிரதையா இருப்பாங்க. ஆனால், அடுத்தவங்​களோட அட்வைஸுக்குத் தலை வணங்குறவங்க. எங்கள் மண வாழ்க்கை ஒரு வருஷம்தான். அப்புறம் பிரிஞ்சுட்டோம். ஆண்டவன் நடத்தும் விளையாட்டுகள் எல்லாமே அனுபவங்கள்தான். 1,000 வருடங்களுக்கு உரிய அனுபவங்களை நான் கத்துக்கிட்டது கனிமொழியின் பிரிவுக்குப் பிறகுதான். யாரும் யாரோட வாழ்க்கையிலும் தலையிட முடியாது. சில பிரிவுகளுக்குப் பின்னால்தான் அது புரியுது. வேறு என்ன சொல்றது?''
''கனிமொழி திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதை எப்படிப் பார்க்கிறீங்க?''
''ஆறுதல் சொல்லும் நிலையில் நான் இல்லை. இது எல்லாம் நேரத்தால் உண்டாகிறது. நாளைக்கே கடந்து போய்விடும். நித்தியானந்தா மிகுந்த அறிவார்ந்த ஆள். அவரைக் கடவுளாகவே மக்கள் கும்பிட்டாங்க. ஆனா, இன்னிக்கு என்னாச்சு? அவரைப் பார்க்கிறதே பாவம்னு நினைக்கிற அளவுக்குப் பேசுறாங்க. நாம எப்பவும்போல நார்மலாக இருந்தாலும், நம்ம சூழ்நிலை நமக்கு வேறு பிம்பத்தைக் கொடுத்துட்டுத்தான் இருக்கு. அதுக்குக் கவலைப்படக் கூடாது. கடந்து போற வாழ்க்கையில் எதுவுமே நிலை இல்லை. எதைப் பார்த்து கனிமொழி பயந்தாங்களோ, எது அவங்களைத் தயங்கவெச்சதோ... அது எல்லாத்​தையும் எதிர்கொள்ளக்கூடிய சக்தி அவங்​களுக்கு இப்போது கிடைத்து இருக்கும்!''
''ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கனிமொழி தவறு பண்ணி இருப்பாங்​கன்னு நம்புறீங்களா?''
''யாருக்கும் நாம ஜட்ஜ்மென்ட் எழுத முடியாது. ஒவ்வொரு மனுஷங்​களோட நல்லது கெட்டது அவங்களோட மனசாட்சிக்கு மட்டுமே தெரியும். எனக்குத் தெரிஞ்சு கனிமொழி, லாப நோக்கம் பார்க்காத அப்பாவி. யாரையும் நம்பவைக்கிறதுக்காக நான் இதைச் சொல்றதா நினைக்கக்கூடாது. அது என்னோட வேலை இல்லை!''
''திருமண முறிவுக்கு அப்புறம் உங்க வாழ்க்கை எங்கெல்லாமோ போயிடுச்சே?''
''செகண்ட் மேரேஜ் பண்ணிக்கிட்டேன். பாதி இத்தாலி, பாதி இங்கிலீஷ்னு பேசிய யுனைடெட் நேஷனின் ஜர்னலிஸ்ட் பெண். குழந்தையும் பிறந்தது. கடவுளைத் தேடிப்போற பயணத்தில் என் குழந்தையும் இருக்குது. எனக்கும் கடவுளுக்குமான பயணம்தான் இந்த வாழ்க்கை. எது கையைவிட்டுப் போனப்பவும், நான் கவலைப்படவில்லை. வசதி வாய்ப்பாக இருந்தாலும் என் குடும்பத்துக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை. கனிமொழியைத் திருமணம் பண்ணினப்ப அத்தனை பத்திரிகையிலும் என்னைத் தூக்கிவெச்சுக் கொண்டாடினாங்க. 'ஏன் இப்படிப் பண்றாங்க?’னு கூச்சப்பட்டேன். திருமண முறிவையும் எழுதித் தள்ளினாங்க. ஏன் கொண்டாடினாங்க... ஏன் திட்டினாங்கன்னு எனக்கு கடைசி வரைக்கும் தெரியாது.
எல்லாத்தையும் விட்டுட்டு இந்தக் காவிக் கோலத்தில் நான் திரியும்போதுகூட, 'யூ அதிபன் போஸ்?’னு அடையாளம் கண்டு சிலர் பேசுவாங்க. 'ஆம்’, 'இல்லை’ன்னு எந்தப் பதிலையும் சொல்லாமல் சிரிச்சுக்கிட்டே போவேன்... போறேன்!''
- இரா.சரவணன்

''அன்புமணியால் பதவி இல்லாமல் இருக்க முடியாது!''

''அன்புமணியால் பதவி இல்லாமல் இருக்க முடியாது!''

அதிரடி கிளப்பும் பா.ம.க. அதிருப்தியாளர்கள்
திருப்தியாளர்களின் அதிரடியும், பா.ம.க-வின் பதிலடி யுமாக கிடுகிடுத்துக்கிடக்கிறது வன்னியர் பெல்ட்!
பா.ம.க-வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் காவேரியும் காமராஜும், தங்கள் ஆதர வாளர்களுடன் ஓர் ஆலோசனைக் கூட்டத்துக்கு நாள் குறிக்க, அவர்களுக்குப் போட்டியாக அதற்கு முதல் நாள் பா.ம.க. சார்பில் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டப் பொதுக் குழு கூட்டத்தை நடத்தினார்கள்.
கடந்த 25-ம் தேதி மேச்சேரியில் நடந்த கூட்டத்துக்கு, கட்சியின் மாநிலத் தலைவரான கோ.க.மணிதான் தலைமை தாங்குவார் என சொல்லப்பட்டது. ஆனால், மணி வரவில்லை. மாநில துணைப் பொதுச் செயலாளரான ஓமலூர் தமிழரசு, கூட்டத்தை வழி நடத்தினார். கூட்டம் முடிந்த பிறகு ஓமலூர் தமிழரசுவிடம் பேசினோம். ''தனக்குத் திரும்பவும் எம்.எல்.ஏ. ஸீட் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் வாய்க்கு வந்ததை எல்லாம் காவேரி சொல்லிட்டு இருக்கார். மருத்துவர் ஐயாவை யாருமே பார்க்க முடியாதுன்னு காவேரி சொல்றது வடி கட்டிய பொய். தைலாபுரம் தோட்டத்துக்கு எங்க எல்லோரையும்விட காவேரிதான் செல்லப்பிள்ளை. அவரோட இரண்டாவது மகன் கல்யாணத்தை, 'எனக்கு குல தெய்வமே தைலாபுரத்தில்தான் இருக்குது. அதனால், என் பையன் கல்யாணத்தை அங்கேதான் நடத்துவேன்’னு சொல்லி தைலாபுரம் தோட்டத்துக்குத் தன் மகனை கூட்டிட்டுப் போய் மருத்துவர் ஐயா முன்னாடி தாலி கட்ட வெச்சார். வாரிசு அரசியல்னு சொல்றாரே... தி.மு.க-வில் வாரிசு அரசியல் இல்லையா..? காங்கிரஸில் இல்லையா..? சின்னய்யாவை நாங்க எல்லோரும் கட்டாயப் படுத்தித்தான் கட்சிக்குள் கொண்டு வந்தோம்.
ஐயாவைப் பத்தியோ... சின்னய்யாவைப் பத்தியோ பேச காவேரிக்கு எந்தத் தகுதியும் கிடை யாது. ஊரு ஊராகப் போய் ஊசி போட்டுட்டு இருந்த ஆர்.ஐ.எம்.பி. டாக்டரான காவேரியை, எம்.எல்.ஏ.வாக்கி அழகு பார்த்தது மருத்துவர் ஐயாதான். இன்னிக்கு காவேரியோட சொத்து மதிப்பு என்னன்னு கணக்கெடுக்கச் சொல்லுங்க. அது எங்கே இருந்து வந்தது?
வன்னியர் சங்கம் என்ற பெயரில் நாளைக்கு காவேரியும் காமராஜும் சேர்ந்து கூட்டம் போடு றாங்க. மக்கள் யாரும் தெரியாத்தனமா அங்கே போயிடக் கூடாதுன்னுதான் இன்னிக்கு நாங்க கூட்டம் போட்டோம். பா.ம.க. தொண்டன் ஒருத்தன்கூட அவங்ககூட போக மாட்டான். இதைத்தான் கூட்டத்தில் பேசினோம்...''என்றார்.
காவேரி தலைமையிலான பா.ம.க. எதிர்ப்பாளர் கள் கூட்டம், அதே மேச்சேரியில் 26-ம் தேதி நடந்தது. சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் கூடியி ருக்க, நிர்வாகிகள் சிலருக்குப் பேச வாய்ப்பு வழங்கப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ. காமராஜ், ''மேட்டூரிலும் பென்னாகரத்திலும் தன்னுடைய குடும்பத்தைத் தவிர வேற யாரும் எம்.எல்.ஏ. ஆகிடக் கூடாதுன்னு கோ.க.மணி நினைக்கிறார். மணியோட பையன் தமிழ்க்குமரனுக்கு எதிராக யாரும் இந்தப் பகுதியில் வளர்ந்துடக் கூடாது என்ப தில் கவனமா இருக்கார். என்னைப் போன்றவர்கள் இருந்தால் பிரச்னை என்பதால்தான், என்னைக் கட்சியைவிட்டு நீக்கி இருக்காங்க. இதை எல்லாம் ராமதாஸ்கிட்ட சொன்னாலும், அவர் கேட்க மாட் டார். மணியைப்பத்தி ராமதாஸ்கிட்ட ஒரு வக்கீல் புகார் பண்ணினார். மறுநாள் அந்த வக்கீலுக்கே மணி போன் பண்ணி, 'ராமதாஸே நினைச்சாலும் என்னை கட்சியைவிட்டு நீக்க முடியாது!’ன்னு சிரிச்சாராம். இப்படிப்பட்ட ஒரு இயக்கத்துல இத்தனை வருஷத்தை வீணடிச்சுட்டோமேன்னு ரொம்ப வருத்தமா இருக்கு...'' என்று வேதனையைக் கொட்டினார்.
உணர்ச்சிப் பிழம்பாக மைக் பிடித்தார் காவேரி. ''தலைமைக்கு எதிரான கருத்துகளை நான் சொன்னதாக மருத்துவர் ராமதாஸ் நினைத்து இருந்தால், என்னைத் தைலாபுரம் தோட்டத்துக்கு அழைத்து சவுக்கால்கூட அடித்திருக்கலாம். ஆனால், எங்களோட கடந்த கால உழைப்பை எல்லாம் மறந்துட்டு, என்னைப்போல உண்மையாக உழைத்த ஒவ்வொருவரையும் வெளி யேத்துறீங்க. எங்க வேதனையும் சாபமும் உங்களை சும்மாவிடாது.
ஒரு காலத்தில் நீங்க, 'நானோ, என் மகனோ சட்டமன்றத்திலோ, நாடாளுமன்றத்திலோ கால்வைக்க மாட்டோம்’ என்று சத்தியம் செய் தீர்கள். நீங்கள் ஒரு சத்ரியன். சத்ரியன் எப்போதும் பொய் பேச மாட்டான். நீங்கள் பொய்யும் பேசி விட்டீர்கள், வாக்கும் தவறிவிட்டீர்கள். இது மன்னிக்க முடியாத குற்றம்!
அன்புமணியால் பதவி இல்லாமல் இருக்க முடியாது. ஏன் அப்படி பதவி வேண்டும் என்றால், போட்டியிட்டு ஜெயிக்க வேண்டியதுதானே? ஏன் எப்போதும் பிளஸ் ஒன் கேட்டு வாங்குகிறீர்கள்? மணி போன்ற ஆட்களைத் தலைவராக வைத்திருக்கும் வரை, பா.ம.க. எந்தக் காலத்திலும் தலை தூக்கவே முடியாது. நமக்குன்னு ஒரு கொடி விரைவில் வரும். அதுவரை எந்த கரை வேஷ்டி கட்டுவதுன்னு உங்க எல்லோருக்கும் ஒரு குழப்பம் வரும். இளைஞர்களாக இருப்பவர்கள் பேன்ட் சட்டை அணியுங்கள். மத்தவங்க எந்த கரையும் இல்லாத சாதாரண கதர் வேட்டி அணியுங்கள். இந்தக் குழப்பத்துக்கு எல்லாம் விரைவில் விடையும் கொடியும் கிடைக்கும்!'' என்று பேசிக் கைதட்டல் வாங்கினார்.
அதிருப்தியில் இருக்கும் பா.ம.க-வினரை அரவணைக்கும் முயற்சியில் அ.தி.மு.க-வும், தே.மு.தி.க-வும் களம் இறங்கி இருப்பதால், இன்னமும் நிறையத் திருப்பங்கள் வரலாம்!
- கே.ராஜாதிருவேங்கடம்

பழசு இன்றும் புதுசு


நேற்றும் நமதே-22: 9.2.94



ட்டு மாதங்கள்கடந்த பின்னரும் அந்த திகில் இன்​னும் மறைய​வில்லை. கடந்த வருடம் ஜூன் மாதம் 6-ம் தேதி... புட்டபர்த்தியில் சாயிபாபாவின் ஆசிரமம் ரணகள​மானது. அவரைக் கொலை செய்ய முயற்சி நடந்தது. அதைத் தடுக்க முற்பட்ட அவரது இரண்டு உதவியாளர்கள் கொல்லப்பட்டனர். கொலையாளிகள் நான்கு பேரையும் போலீஸார் சுட்டுக் கொன்றனர்!
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில், ஆந்திராவின் சி.ஐ.டி போலீஸார் இதுவரை செய்த விசாரணையில் எந்தவிதப் பலனும் இல்லை. சமீபத்தில் சாயி​பாபாவை தரிசிக்க வந்திருந்த ஜனாதிபதி சங்கர்தயாள் சர்மா, பத்திரிகை​யாளர் ஒருவரிடம் சொன்ன தகவல் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
''இந்த வழக்கில் இதுவரை ஒன்றுமே கண்டுபிடிக்கப்​படவில்லையே..?'' என்று அந்த நிருபர் கேட்டார். ''எல்லாவற்றுக்கும் காரணம் ஒரு பெண்தான்!'' - இதுதான் சர்மா அந்தப் பத்திரிகையாளரிடம் கூறியது.
ஜனாதிபதி இப்படிச் சொன்ன பிறகு, இந்த வழக்கை விசாரிக்கும் சி.ஐ.டி. போலீஸ் அதிகாரிகள் பரபரப்பாகி, புதிய கோணத்தில் இந்த வழக்கைத் துவக்கத்தில் இருந்து ஆரம்பிக்கப்போவதாக அறிவித்துள்ளனர். இந்தத் தகவல் ஒரு விஷயத்தை மட்டும் வெட்ட வெளிச்சம் ஆக்கிவிட்டது. 'விசாரணை’ என்ற பெயரில் இத்தனை நாள் நடந்தது எல்லாம் வெறும் நாடகம்தான். பிரசாந்தி நிலையத்துக்குள் ஒரு ஈ, காக்கையைக்கூடப் பேசவைக்க போலீஸாரால் முடியவில்லை!
இந்த வழக்கு பற்றி சி.ஐ.டி. போலீஸார் தரப்பில் பேசப்படுவது இதுதான் -'1993 ஜூன் 6-ம் தேதி இரவு சாயிபாபாவுக்குத் தந்தி வந்திருப்பதாகக் கூறி உள்ளே நுழைந்த நான்கு பேர், ராதாகிருஷ்ணன் மற்றும் சுனில்குமார் என்ற இருவரைக் குத்திக் கொன்றனர். இன்னும் இருவர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட விஜய சாந்தாராம் பிரபு, ஜகந்நாதன், சுரேஷ்குமார் மற்றும் சாய்குமார் ஆகியோர் 'வேண்டுமென்றே’ போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜூன் 6-ம் தேதியே மாநில சி.ஐ.டி. போலீஸ் வழக்கை எடுத்துக்கொண்டு விசாரிக்கத் துவங்கியது. ஆனால், சாயிபாபாவின் அனுமதி இன்றி, ஒன்றுமே செய்ய முடியாத நிலை. பிரதமர் மற்றும் ஜனாதிபதி போன்றோரே சாயிபாபாவின் பக்தர்களாக இருக்கும்போது, எங்களால் அந்த ஆசிரமத்தில் ஒருவரையும் சுதந்திரமாக விசாரிக்க முடியவில்லை!’
இந்தக் கொலைகளுக்குத் திட்டம் தீட்டித் தந்ததாகக் கருதப்படும் முக்கிய ஆட்களில் விஜய சாந்தாராம் பிரபு மற்றும் ரவீந்திரநாத் என்ற ரவி ஆகியோர் ஜூலை 7-ம் தேதி நாக்பூரில் கைதானார்கள். இதுதான் போலீஸாரின் ஒரே வெற்றி.
அதற்குப் பின்னர் நாடகத்தின் அடுத்த பகுதி துவங்கியது. இவர்களின் மீதான குற்றப் பத்திரிகையை வேண்டும் என்றே தாக்கல் செய்யாமல் விட்டனர் சி.ஐ.டி. போலீஸார். இவர்கள் கைதான 90 நாட்களுக்குள் குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்பதை சி.ஐ.டி. போலீஸார் 'மறந்து’​விட்டனர். போலீஸின் இந்தத் தவறால், பிரபுவும் ரவியும் ஜாமீனில் வெளியே வந்து​விட்​டனர்.
ரவி இப்போது விஜய​வாடாவில் இருக்கிறார். ஜனாதிபதி சொன்ன அந்தத் திடுக்கிடும் தகவல்பற்றி அவரிடம் கேட்டபோது. ''ஜனாதிபதி சொன்னது உண்மைக்கு ரொம்ப தூரத்தில் இல்லை. ஆனால், அவர் சொன்னது ரொம்பக் குறைவு!'' என்று மட்டும் சொன்னார். மற்ற விவரங்களைக் கூற அவரும் மறுத்துவிட்டார். இந்த 'பெண்’ விவகாரம் ஆரம்பத்திலேயே பிரசாந்தி நிலையத்தின் பக்தர்கள் வட்டாரத்தில், வதந்தியாக இருந்ததுதான். இந்தக் கொலை முயற்சி நடந்தவுடனேயே அரசல்புரசலாக போலீஸாருக்கும் தகவல் வந்தது. அப்போது இதைக் கண்டுகொள்ளவில்லை.
'பெண் விவகாரம்’ என்பதற்கு நாம் விசாரித்த வரையில், பல கோணங்களில் விவரங்கள் கிடைத்தன. சி.ஐ.டி போலீஸ் உயர் அதிகாரி சொன்னார்... ''வழக்கமாக எல்லா வழக்குகளிலும் போலீஸ்​தான் உண்மைகளை வெளியே கொண்டுவரும். இந்த வழக்கில் நடந்தது வேறு! ஜனாதிபதியே மனம் கசந்து ஏதோ ஓர் உண்மையை லேசாகக் காட்டி இருக்கிறார். இந்தத் தாக்குதல் சம்பவத்துக்குப் பணம் மட்டுமே காரணம் இல்லை. 'பெண்’ விவகாரம் என்று சொல்கிறார்களே தவிர, அதில் காதல் குழப்பம் ஏதும் இல்லை!'' என்று தனக்குத் தெரிந்த உண்மையைக் கூறினார்.
அனந்தப்பூரில் புலனாய்வு அதிகாரி ஒருவர் இதைப்பற்றிக் கூறும்போது...
''கொலை முயற்சி சம்பவத்துக்கு 15 நாட்களுக்கு முன் 18 அல்லது 17 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிரசாந்தி நிலையத்துக்குள் நுழைந்தாள். அதன் பின் என்ன ஆனாள் என்று தெரியவில்லை. கொல்லப்பட்ட நான்கு கொலை​யாளிகளில் ஒருவரின் உறவினர் அந்தப் பெண் என்று மட்டும் தெரிகிறது. இதை நாங்கள் முதலிலேயே கேள்விப்பட்டாலும், சாயிபாபா தங்கக்கூடிய வளாகத்​துக்குள் பெண்கள் எவரும் தங்க அனுமதிக்கப்படுவது இல்லை. கணவர் அல்லது தந்தை​யுடன்தான் பெண்கள் அவரை சந்திக்க முடியும் என்பதால், அந்தப் பெண்ணும் சாயிபாபாவை சந்தித்து இருக்க முடியாது என்ற எண்ணத்தில் அவளைப்பற்றி ஆரம்பத்தில் கண்டுகொள்ளவில்லை...'' என்றார்.
''அந்த இளம்பெண், சாயிபாபாவின் வளாகத்​துக்குள் சென்றிருக்கிறாள் என்பதே உண்மை. அவள் அங்கு செல்ல வேண்டிய அவசியம் என்ன? அந்தப் பெண்ணுக்கு மட்டும் இத்தனை சலுகைகள் யார் தந்தது? அந்தப் பெண்ணுக்கு என்ன நேர்ந்தது? உலகத்துக்கு இதை மறைப்பதால் அபத்தமான கற்பனைகள்தான் அதிகமாகும் என்பதைப் பிரசாந்தி நிலையத்தினர் அறிய மாட்டார்களா?'' என்று கேட்கிறார், பாபாவின் நீண்ட கால பக்தர் ஒருவர்.
சாயிபாபாவின் உதவியாளராக இருந்து கொலை செய்யப்பட்ட ராதாகிருஷ்ணனின் சகோதரியை மணக்க, போலீஸாரால் கொல்லப்பட்ட இந்த நால்வரில் ஒருவரான சுரேஷ்குமார் முயன்றதாகவும், ஆனால், ராதாகிருஷ்ணன் அதற்கு சம்மதிக்காததால், அவரைத் தன் தோழர்களுடன் சேர்ந்து கொலை செய்துவிட்டதாகவும் திடுக்கிடும் வதந்தி ஒன்று உலவுகிறது. அதே கையோடு பாபாவிடம் மன்னிப்புக் கேட்க, அவரது அறைக்கு நால்வரும் போனதாகவும், ஆனால், அதைப் போலீஸ் தவறாகப் புரிந்துகொண்டு இவர்களைச் சுட்டுக் கொன்றுவிட்டதாகவும் அந்த வதந்தியின் தொடர்ச்சியாகப் பேசிக்கொள்கிறார்கள்.
இதற்கு நேர்மாறான இன்னொரு வதந்தி - பாபாவின் உதவியாளரான ராதாகிருஷ்ணன் ஒரு பெண்ணைக் காதலித்ததாகவும், அதே பெண்ணை போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சுரேஷ்குமாரும் காதலித்ததாகவும்... இந்தப் பிரச்னையில்தான் ராதாகிருஷ்ணன் கொல்லப்பட்டதாகவும்!
அதே சமயம், பிரசாந்தி நிலையத்தில் தங்கிப் படித்து வெளியே வந்த சிலரை நம்மால் சந்திக்க முடிந்தது. இந்த விவகாரம்பற்றி அவர்கள் அறிந்துள்ளனர் என்பதை இவர்களின் பதற்றம் நமக்கு உணர்த்தினாலும், நமக்கு விவரங்களைக் கூற இவர்கள் தயார் இல்லை. அவர்களில் ஒருவர் சொன்ன தகவல்...
சாயிபாபாவுடன் முன்பு நெருக்கமாக இருந்தவரான பக்தர் ஒருவர் அவரை தெய்வமாகவே பாவித்தார். ஒரு தடவை சாயிபாபா ஒரு புறாவைக் காட்டி ''இது என்ன?'' என்றபோது, ''புறா...'' என்றார். ''இல்லை... அது கிளி..!'' என்றார் சாயிபாபா. ''ஆமாம்... அது கிளிதான்...'' என்றார் பக்தர். ''அது பருந்தல்லவா..?'' என்றார் சாயிபாபா. ''அது பருந்தாகவும் இருக்கலாம்...'' என்று பக்தர் சொல்ல, ''நான் என்ன சொன்னாலும் ஆமாம் என்கிறாயே... எப்படி?'' என்ற சாயிபாபாவிடம், ''நான் என் கண்களைவிட உங்கள் கண்களையே அதிகம் நம்புகிறேன்...'' என்றாராம் அந்தப் பக்தர்.
அந்தப் பக்தரைத் திருமணம் செய்து​கொள்ளச் சொல்லி அறிவுரை கூறிய சாயிபாபா, தானே ஒரு பெண்ணைத் தேர்ந்து எடுத்தார். தன் கடவுளின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டுத் திருமணம் செய்துகொண்டார். ஆனால், அந்தப் பெண்ணின் போக்கு சரி இல்லையாம். இதனால் வந்த வினைதான் இத்தனைக்கும் அடிப்படை என்கிறார்கள். கொலை முயற்சி சம்பவத்துக்கு முன்பு வரை 15 நாட்களுக்கு மேல் பிரசாந்தி நிலையத்தில் சாயிபாபாவின் தங்கும் இடத்துக்கு அருகில் நடமாடிய அந்தப் பெண், அப்புறம் காணவில்லை. இந்தப் பெண் கர்நாடக முன்னாள் முதல்வர் ஒருவருக்கு உறவினராம்!
மெரைன் இன்ஜினீயரான சுரேஷ் சாந்தாராம் பிரபு, கடலில் இல்லாத நாட்களில் பிரசாந்தி நிலையத்தில் தங்குவது உண்டு. அவருக்கும் அவரது அப்பாவுக்கும் இரண்டு அறைகளை சாயிபாபா ஒதுக்கி இருந்தார்.
சம்பவத்துக்குப் பின் இந்த அறைகள் அவசர​மாகக் காலி செய்யப்பட்டன. சாயிபாபாவின் கணக்கிடலங்கா செல்வத்தைக் கட்டி ஆளத் துடிக்கும் சுயநலவாதிகளின் போர்தான் இந்தக் கலாட்டா என்றே அனைவரும் கருதுகின்றனர். நாக்பூரில் கைதான விஜயசாந்தாராம் பிரபுவும் இதையே கூறினார்.
''ஐந்து பேர்கொண்ட கும்பல் ஒன்று பக்தர்களின் காணிக்கையாக வந்த எக்கச்சக்கமான பணம், நகைகளைக் கொள்ளையடித்து வந்தது. பாபாவுக்குத் தெரியாமல் இத்தனையும் நடந்து வந்தபோது, நான் அவரிடமே புகார் கூறினேன். எனக்கு சாயிபாபா நெருக்கமாகி வருவதைக் கண்டு அவர்கள் பயந்தனர். ஆனால், சாயிபாபா தன் முன் ஆதாரங்களை வைக்கும் வரை எப்போதும் நடவடிக்கை எடுப்பது இல்லை. அதனால் அவர்களும் சிக்கவில்லை...'' என்று விஜயசாந்தாராம் பிரபு கொடுத்த வாக்குமூலமும் இந்த எண்ணத்துக்கு வலுவூட்டியது.
இது விஷயமாக நாம், சாயிபாபா மடத்தில் தங்கிப் படித்த பழைய மாணவர்களை சந்தித்தபோது, அவர்களின் முகம் பதற்றத்தில் நிறம் மாறுவதை நம்மால் காண முடிந்தது.
ஒன்று தெளிவாகப் புரிகிறது... நடந்து முடிந்த பயங்கரத்தின் பின்னே உள்ள மர்மங்களைத் தொடர்ந்து மறைத்தால், நாளையே பெரிய ஆபத்து பாபா ஆசிரமத்துக்குள் உருவாகலாம். ஆசிரமத்துக்குள் கிடைத்திருக்கும் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளும், சயனைடு விஷ மருந்தும் எதற்காக ஆசிரமத்துக்குள் வந்தன?
சாயிபாபாவின் அறையிலேயே சம்பவம் நடந்த அடுத்த நாள் சி.ஐ.டி. போலீஸார் சோதனை போட்டதில் ஒரு லேடீஸ் ஹேண்ட் பேக் எப்படிக் கிடந்தது? அதில் ஆபரேஷன் நேரத்தில் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கை உறைகளும், சயனைடு விஷம் நிறைந்த ஊசி சிரிஞ்சும் ஏன் இருந்தன..?
பதில் சொல்ல யாருமே இல்லையா?!

மிஸ்டர் மியாவ்: 'வருத்த'ராஜ்!

விஜயகாந்த் வீட்டுக் கடைக்குட்டி சண்முக​பாண்​​​டியன் கேமராவுக்கு முகம் காட்டப் போகிறார். மாமா எல்.கே.சுதீஷ் தயாரிக்கும் படத்தில் சண்முகம் ஹீரோ. இவருக்​கென்று புதுசாக ஒரு கதையை உருவாக்கி இயக்குகிறார் பூபதி பாண்டியன்! 
நரேன் நாயகனாக நடித்த 'அஞ்சாதே’ படத்தில் பிரசன்னாவுக்கு வில்லன் வேஷம் கொடுத்தார் மிஷ்கின். இப்போது ஜீவா ஹீரோவாக நடிக்கும் படத்தின் பிரதான வில்லன் ரோலுக்கு நரேனைத் தேர்வு செய்து இருக்கிறார்!
முன்னணி நடிகர்கள் வயிற்றில் டன் கணக்கில் புளி கரைக்கிறார் சூர்யா. கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'மாற்றான்’ படத்துக்கு பூஜையே இன்னும் போட​வில்லை. அதற்குள் 63 கோடிக்கு விலை பேசும் அளவுக்குப் பரபரப்பான வியாபாரமாம்!
Click
எஸ்.பி.பாலசுப்ரமணியம் தனது கோதண்டபாணி ரெக்கார்டிங் தியேட்டரை விலைபேசுவதாகச் சொன்னது, நடந்தேவிட்டது. 99 வருட அக்ரிமென்ட் அடிப்படையில் ஜெமினி லேப் நிறுவனத்திடம் விற்றுவிட்டார்! 
தி.மு.க-வில் தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்ட பாக்யராஜுக்கு இப்போது ரொம்ப மன வருத்தமாம். ''குஷ்பு, வடிவேலுவுக்குக் கொடுக்கிற மரியாதையைக்கூட எனக்குத் தருவது இல்லையே...'' என்று நெருக்கமான புள்ளிகளிடம் உருக்கமாகப் புலம்புகிறாராம்!


ஒளிமயமான நடிகர்  தயாரிக்கும் படங்களில் தவறாமல் இடம்பெறும் மூத்த நகைச்சுவை எஸ்.எம்.எஸ் நடிகர் ஒருவர், ''அவரோட எல்லா படத்துலேயும் நடிச்சா மட்டும் போதுமா? சம்ப​ளம்னுஒண்ணு இருக்கே... அதைத் தர வேணாமா?'' என்று சக நடிகர்களிடம் வேதனையில் புலம்புகிறாராம்!
கிராமத்து இயக்குநர், தலைவர் பதவியை தூக்கி எறிய நினைத்தாராம்.  ''உங்களுக்காக அலைஞ்ச எங்க உழைப்பை மதிக்க மாட்டீங்களா?'' என்று ஆதரவாளர்​களிடம் இருந்து கோரஸாக குரல் கேட்கவே, கண் கலங்கி முடிவை வாபஸ் பெற்றாராம்!
காக்கியின் உதவி​யை நாடியுள்ள செல்வ நடி¬​கக்கு, அவர் கேட்காமலே கதர்கள் ஆதரவை வாரி வழங்குகிறார்​களாம். கடுப்பில் இருக்​கின்றனர் கறுப்புச் சட்டை​கள்!

கழுகார் பதில்கள்

அரசியல் காழ்ப்பு உணர்வு தமிழகத்தில்தான் அதிகமா?
நல்லா இருந்த தமிழ்நாடுதான் இது!
அரசியலில் எதிரெதிர் துருவமாக இருந்த பெரியாரும் ராஜாஜியும் கடைசி வரை நல்ல நட்புடன் சிரித்துப் பேசிக்கொண்டுதான் இருந்தார்கள். காங்கிரஸுக்கு எதிராகக் கச்சை கட்டி நின்ற அண்ணா, குடியாத்தம் இடைத் தேர்தலில் காமராஜருக்கு எதிராக வேட்பாளரைக்கூட நிறுத்தாமல் கண்ணியம் காத்தார். சட்டசபையில் முதல்வர் பக்தவத்சலத்தைக் கேள்விகளால் துளைத்த கருணாநிதி, அவரைத் தனது தொகுதிக்கு அழைத்துச் சென்று விழாக்கள் நடத்தினார். எந்தப் பெரியாரை எதிர்த்துக் கட்சி தொடங்கினாரோ, அவரைத்தான், தான் தேர்தலில்  வென்றதும் சந்தித்தார் அண்ணா. இவ்வளவு ஏன், தன்னைச் சுட்டதாக கைதாகி சிறையில் இருந்து வெளியே வந்த எம்.ஆர்.ராதாவுடன் எம்.ஜி.ஆர். சிரித்துப் பேசிய புகைப்படங்கள்கூட உண்டு.
ஆனால், இந்தக் காட்சிகள் அனைத்தும் கருணாநிதி - எம்.ஜி.ஆர். பிரிவுக்குப் பிறகுதான், பங்காளி மோதலாக  மாறியது. இன்று பகையாளிச் சண்டையாக நிற்கிறது.
அரசியல் என்பது, சேவையாக இருந்தால் அது போட்டியாக மட்டும் முடிந்திருக்கும். சம்பாத்தியமாக மாறியதால், பொறாமையாக வெடித்துவிட்டது!
மா.சுந்தரமூர்த்தி, செய்யாறு.
அரசியல்வாதிகளுக்கு ஏன் கல்வித் தகுதி வைப்பது இல்லை?
அதிலும் ஃபோர்ஜரிதான் நிகழும். அப்புறம் எதற்கு அந்தத் தகுதி? வட இந்தியப் பல்கலைக்​கழகங்கள் இது போன்ற எத்தனையோ பட்டங்களை வாரி வாரி வழங்கி வருகின்றன. அதை வாங்கிக்​கொண்டு, வழக்கறிஞர்களாக, டாக்டர்​களாக வலம் வருவார்கள்.
எல்லா விதிகளுக்கும் விதிவிலக்கு உண்டு என்பது​தானே இந்தியாவின் எழுதப்படாத விதி!
இரா. வளையாபதி, தோட்டக்குறிச்சி
லோக்பால் மசோதா வரைவுக் குழுவின் கடைசிக் கூட்டத்திலும் உடன்பாடு ஏற்படாதது ஏன்?
உடன்பாடு ஏற்படாததுகூடப் பரவாயில்லை. பிரதமர் பதவியில் இருப்பவரையும் இந்த சட்டத்தின் வரையறைக்குள் கொண்டுவர வேண்டும் என்று சொல்வதே பாவம் என்று சோனியா தலைமையில் நடந்த கூட்டம் முடிவெடுப்பதைத்தான் சகிக்க முடியவில்லை. 'மக்கள் கருத்தைக் கேட்க வேண்டும்தான். அதற்காக எல்லா விஷயங்களையும் கேட்டுவிட முடியாது’ என்று சோனியா முன்னிலையில் போட்டதைப்போன்ற எகத்தாளமான தீர்மானத்​தை, எமர்ஜென்சி காலத்தில் இந்திரா காந்திகூடச் சொன்னது இல்லை.
சோனியா இப்படிச் சொல்வதில் ஆச்சர்யம் எதுவும் இல்லை. அவர் மீதான போஃபர்ஸ் கறை இன்னமும் துடைக்கப்படவில்லை. ஆயுத புரோக்கர் குவாத்ரோச்சியைக் காப்பாற்ற சோனியா எடுத்த முயற்சிகளை, சி.பி.ஐ. நீதிமன்றம்​தான் தடுத்துவைத்துள்ளது. எனவே, லோக்பால் மசோதாவை முடிந்த அளவுக்கு சோனியாவே 'ஜோக்பால்’ ஆக்கிவிடுவார்!
எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.
ஐ.நா. பொதுச் செயலாளராக பான் கீ மூன் மீண்டும் தொடரும் அளவுக்கு அப்படி என்ன சாதித்தார்?
எதையுமே சாதித்துவிடக் கூடாது என்பதற்காகக்கூட இந்த நீட்டிப்பு தரப்பட்டிருக்​கலாம். அவரது பதவிக் காலத்தில்தான் உலகம் இதுவரை பார்த்திராத மனித அவலம் ஈழத்தில் நடந்தது. அதைத் தடுக்க, பான் கீ மூன் தவறினார். கொடுமை நடந்தபோது, அவரால் மௌனமாக மட்டுமே இருக்க முடிந்தது.
ஐ.நா. அலுவலர்களை இலங்கை அரசாங்கம் வெளியேறச் சொன்னது. போர் நடக்கும் இடத்தில் இருந்த ஐ.நா. மற்றும் செஞ்சிலுவை இயக்கத்து ஊழியர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க முடியாது என்றது. ஐ.நா. அமைத்த மூவர் குழுவை இலங்கைக்குள் வரத் தடை செய்தது. இது எதையும் தடுக்கத் தவறியவர் பான் கீ மூன்.
தமிழர்களின் உயிரைக் காப்பது அப்புறம். ஐ.நா. அமைப்பின் மரியாதையையாவது காப்பாற்றியிருக்க வேண்டாமா?
 சி.கார்த்திகேயன், சாத்தூர்.
ஆன்மிகம், அரசியல்வாதிகளைக் காப்பாற்றுகிறது என்பதை ஒப்புக்கொள்​கிறீர்களா?
அந்த முன்னாள் அமைச்சரை மிகவும் மதித்தார் ஜெயலலிதா. பல்வேறு பொறுப்புகளையும் கொடுத்தார். ஆனால், இப்போது அமைச்சர் பதவி மட்டும் அவருக்குக் கிடைக்கவில்லை. அவருக்குக் கிடைக்காமல் இருக்க எந்த நியாயமும் இல்லை. ஆனால் என்ன காரணம் தெரியுமா? அந்த மனிதர், தனக்குப் பதவி கிடைப்பதற்காக ஏதோ யாகம் நடத்தினாராம். அது தோட்டத்துக்குத் தெரிந்துதான், கல்தா கொடுத்தார்களாம். ஆன்மிகம், அரசியல்வாதிகளை எல்லா நேரத்திலும் காப்பாற்றுவது இல்லை!
 கே.பார்த்திபன், பரமன்குறிச்சி.
ஊழலை ஒழிக்க காங்கிரஸ் என்ன செய்ய வேண்டும்?
ஊழல் செய்யாமல் இருந்தாலே போதும்!
 முத்துக்குமாரசாமி, ரிஷிவந்தியம்.
பிரணாப் முகர்ஜியின் அறையில் ரகசிய மைக் பொருத்தப்பட்டு இருந்ததாமே?
இதில் அதிர்ச்சி அடைய எதுவும் இல்லை! அதிகாரத்​தில் இருப்பவருக்கு அச்சுறுத்தலானவர் எவரோ, அவரது நடவடிக்கைகளைக் கண்காணிக்கவே செய்வார்கள். ராஜீவ் பிரதமராக இருந்தபோது குடைச்சல் கொடுத்த நிதி அமைச்சர் வி.பி.சிங் அறையிலும், அப்போது ஜனாதிபதியாக இருந்த ஜெயில்சிங் அறையிலும்கூட, இதுபோன்ற கருவிகள் பொருத்தப்பட்டதாக, ஓய்வு பெற்ற புலனாய்வு அதிகாரிகள் தங்களது புத்தகங்களில் எழுதி உள்ளார்கள். சோனியா குடும்பத்துக்கு அச்சுறுத்தலாக இருந்ததால், மேனகா அறையில்கூட இவை பொருத்தப்பட்டன.
மன்மோகனது இடத்தில் உட்கார பிரணாப் பல காரியங்களைப் பார்த்து​வந்தார். அதனால், இவை பொருத்தப்​பட்டு இருக்கும். கவலைப்பட வேண்டியவர் பிரணாப் மட்டும்தான்!
 மதுப்பித்தன், சென்னை.
ஜெயலலிதாவுக்குப் பிறகு நடிகைகள் யாருக்காவது நாடாளும் வாய்ப்புஇருக்கிறதா?
இப்போதைக்குச் சொல்ல முடியாது. யாரையாவது உதாரணமாகச் சொல்லி, அவர் உண்மைதான் என்று நினைத்து உள்ளே வந்துவிடப்போகிறார்!
சும்மா இருந்த ஜெயலலிதாவை, முரசொலி மாறன் சீண்டியதால்தான் இந்த ஆபத்தே வந்தது! ஏதோ ஒரு பேட்டியில், 'போகிற போக்கைப் பார்த்தால், ஜெயலலிதா தமிழ்நாட்டு முதல் அமைச்சர் ஆகிவிடுவார் என்று சொல்வீர்கள்போல’ என்று 1966 கால கட்டத்தில் மாறன் சாதாரணமாகச் சொன்னார். அது நடந்தே விட்டது.

மிஸ்டர் கழுகு: அம்மா-அன்னை மோதலில் டெல்லியின் முதல் செக்!

நெகிழ்ச்சியாக இருந்தார் கழுகார்!
''மெரீனாவில் ஈழத் தமிழர்களுக்காக நடத்தப்பட்ட'நினை வேந்தல்’ நிகழ்ச்சிக்கு  சென்று வந்தேன். ஆயிரக்கணக்கான மக்கள், குடும்பத்தோடு வந்து நின்ற காட்சி அத்தனை உருக்கம்.
இதை நடத்துவதற்குள் 'மே 17’ இயக்கத்தினர் பட்ட பாடு கொஞ்சநஞ்சம் அல்ல. 'மெழுகுவத்தி ஏற்றக் கூடாது’ என்று போலீஸார் முதலில் அனுமதி வழங்கவில்லையாம். 'தீ விபத்து ஏற்பட்டுவிடும்’ என்றார்களாம். மீறித்தான் அதை நடத்தி இருக்கிறார்கள். இப்போது அந்த இயக்கத்தின் அமைப்பாளர் திருமுருகன் உள்ளிட்டோர் மீது மூன்றுவிதமான வழக்குகள் போடப்பட்டு உள்ளன. மெழுகுவத்திகளை எரித்து, அதன் கப்புகளைக் கடற்கரையில் போட்டுச் சுற்றுச்சூழலை மாசுபடுத்தியதாகவும், முழக்கங்கள் எழுப்பியதாகவும், அனுமதித்த அளவுக்கு மேல் ஆட்களைத் திரட்டியது தவறு என்றும் சொல்கிறதாம் அந்த வழக்கு!
'இறந்த மக்களுக்கு, களப் பலியானவர்களுக்கு, திரளாகக் கூடி அஞ்சலி செலுத்துவது என்பது தமிழ் மக்களின் தொன்மையான நிகழ்வு மட்டும் அல்ல, பண்பாட்டு உரிமையும்கூட!’ என்று  வழக்கை சந்திக்கத் தயாராக இருக்கிறார்கள், மே 17 இயக்கத்தினர்...'' என்ற கழுகார், மேலும் செய்திகளை ஆரம்பிக்கும் முன்பு கேட்டோம்.
''2ஜி விவகாரத்தில் ஏதாவது புது தகவல் உண்டா?''
''பல்வேறு கோணங்களில் விசாரணை நடப்பது தெரிந்த விஷயம்தான்! இதில் இன்னொரு கோணம், அடுத்தடுத்த நாட்களில் முக்கியத்துவம் பெறப்போகிறது. முறைகேடாக ஸ்பெக்ட்ரம் உரிமங்களைப் பெற்ற நிறுவனங்களுக்கு, அரசு வங்கிகள் கோடிக்கணக்கான பணத்தை அள்ளி அள்ளிக் கொடுத்துள்ளது. 'இது விதிமுறைப்படித்தான் நடந்ததா? அல்லது உள் கைகள் நடமாட்டம் மூலமாக கமிஷன் தொகைகள் ஏதாவது கை மாறி உள்ளதா?’ என்பதுதான் பூதாகாரமாகும் கேள்வி. ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் பெற்ற நிறுவனங்களுக்குப் பல்வேறு வங்கிகள் சுமார் 11 ஆயிரம் கோடி வரை கடன்கள் கொடுத்துள்ளன. இது தொடர்பாக முன்னணி வங்கிகளின் உயர் அதிகாரிகள் 40 பேர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். அதன் க்ளைமாக்ஸில் நிதித் துறையின் உச்சப் பிரமுகர் ஒருவர் விசாரணை வளையத்தில் வரலாம்.'' 
''அப்போது இந்தத் துறையின் அமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம்தானே?''
''ஆமாம்! அவருக்கே தெரியாமல்கூட நிதித் துறையைச் சேர்ந்த யாராவது உத்தரவு போட்டு இருக்கலாம் அல்லவா? இந்தக் கோணத்திலும் சி.பி.ஐ. பார்க்கிறது.''
''சுப்பிரமணியன் சுவாமி சொல்வது ப.சிதம்பரத்தைத்​தானே?''
''ஆமாம்! தன்னைச் சுற்றிலும் ஒரு வலை பின்னப்படுவதை ப.சிதம்பரமும் உணர்ந்துவிட்டார் போலும்! அதனால்தான், '40 வயது, 50 வயது ஆனவர்கள்தான் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும். என்னைப்போல 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் தரக் கூடாது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் விலகி நிற்க வேண்டும்’ என்று சொல்ல ஆரம்பித்துள்ளார். 'நீங்கள் பிரதமராக விரும்புகிறீர்களா?’ என்று ஒருவர் கேட்க... 'நான் மிச்சம் உள்ள காலத்தை, படிப்பதில், எழுதுவதில், பயணம் செய்வதில், செலவிட விரும்புகிறேன்’ என்று ஞான நிலையை அடைந்தவர்போல அவர் பேசுவதன் பின்னணிகூட இந்தப் பீதியாக இருக்கலாம் என்கிறார்கள்.''
''அது இருக்கட்டும்! இங்கு தமிழக கவர்னரின் பதவிக் காலம் முடிந்துவிட்டதே... அவர் எப்போது போகிறாராம்?''
''சுர்ஜித் சிங் பர்னாலா பதவிக் காலம் ஜூன் 19-ம் தேதி​யுடன் முடிந்துவிட்டது. அவருக்குக் கால நீட்டிப்பு தந்திருக்க வேண்டும். அல்லது பார்ட்டிவைத்து அனுப்பி​விட்டு, புது கவர்னர் வந்திருக்க வேண்டும். இரண்டுமே நடக்கவில்லை. கவர்னரை மையம் வைத்து மத்திய - மாநில அரசுகள் மத்தியில் ஒரு மௌனப் புயல் வீச ஆரம்பித்துள்ளது.''
''புதுக் கதையாக இருக்​கிறதே?''
''டெல்லி சென்ற ஜெயலலிதாவை, காங்கிரஸ் சார்பில் டெல்லி மாநில முதல்வர் ஷீலா தீட்சித் சந்தித்தார் அல்லவா? புதிய கவர்னர் நியமனத்துக்காக, அப்போது மூன்று பெயர்​களை ஜெயலலிதா பரிந்துரை செய்தாராம். மார்க்ரெட் ஆல்வா, நவீன் சாவ்லா, ஜனார்த்தன் ரெட்டி ஆகிய மூவரில் யாராவது ஒருவரைத் தமிழக கவர்னராக நியமித்தால் நல்லது என்றாராம். இதை சோனியாவின் கவனத்​துக்கு ஷீலா தீட்சித் கொண்டுசென்றதாகவும், அப்போது டெல்லி அன்னை, தமிழக அம்மாவைப்பற்றி கோப வார்த்தைகள் சிலவற்றை உமிழ்ந்ததாகவும் பேச்சு. 'ஜெயலலிதாவைப்பற்றி எனக்கு முழுமையாகத் தெரியும். அவரது டிமாண்ட்கள் அனைத்துமே கஷ்டமானதாகவே இருக்கும். அதை நிறைவேற்ற ஆரம்பித்தால், அனுமார் வால் மாதிரி நீளும்’ என்று கமென்ட் அடித்ததாம், டெல்லி மேலிடம். 'கவர்னர் நியமனம் என்பது மத்திய அரசாங்கத்தின் தனிப்பட்ட விருப்பம். அதில் யாரும் தலையிட முடியாது’ என்றதாம் டெல்லி.''
''ஓ!''
''சென்னை வந்த பி.ஜே.பி. தலைவர் சுஷ்மா சுவராஜை சந்தித்து அன்பு பாராட்டியதன் மூலமாக காங்கிரஸ் மீதான கோபத்தை ஜெயலலிதா காட்டியதன் காரணம் இதுதானாம். இதற்கு மத்தியில்...''
''சொல்லும்!''
''தமிழக கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா, புதுச்​சேரி கவர்னர் இக்பால் சிங் ஆகிய இருவர் மீதும் பிரதமர் மன்மோகன் சிங் தனி பிரியம் வைத்துள்ளார். எனவே, பர்னாலாவை அந்த இடத்தில் இருந்து அசைப்பதும் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. 'பர்னாலா மூட்டு வலி தொடர்பான சில சிகிச்சைகளை சென்னையில் செய்து வருகிறார். அதற்காக, அவர் கூடுதலாக ஓரிரு மாதம் அவகாசம் கேட்கிறார். அநேகமாக அந்த நீட்டிப்பை மத்திய அரசு வழங்கலாம். ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் எப்படி இருக்கிறது என்பதையும் பார்ப்போம்’ என்று மத்திய அரசு நினைக்கிறது என்று டெல்லித் தகவல்கள் சொல்கின்றன. சோனியாவின் சாய்ஸ் ஆந்திராவைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் ரோசய்யாவாக இருக்கிறதாம்!'' என்ற கழுகார்...
''ஜெயலலிதா டெல்லி போனபோது, தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்தார். அவர் பயன்படுத்தும் 6666 பதிவு எண்கொண்ட பஜுரோ காரும் சென்னையில் இருந்து டெல்லிக்குக் கொண்டுசெல்லப்பட்டது. ஜெயலலிதா சென்னை திரும்பிய பிறகும், அவருடைய கார் மட்டும் இன்னும் டெல்லியில் தமிழ்நாடு இல்லத்திலேயே காத்திருக்கிறது. ஜெயலலிதா தங்கியிருந்த அறையிலும், அவர் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்த பொருட்களை அங்கேயே வைத்துப் பூட்டி, சாவியை மட்டும் எடுத்து வந்துவிட்டார்களாம். ஜூலை முதல் வாரத்தில், மீண்டும் டெல்லி விசிட் இருக்கலாம். அப்போது சோனியா சந்திப்பு நடக்கலாம் என்கிறார்கள்...'' என்ற பிட்டைப் போட்டுவிட்டு எஸ்கேப் ஆனார்!
படங்கள்: சு.குமரேசன், என்.விவேக்
பந்தாட்டம் ஆரம்பம்!
ஆட்சிக்கு வந்த 43-வது நாளிலேயே அமைச்சரவையில் அதிரடியாக மாற்றம் செய்து இருக்கிறார், முதல்வர் ஜெயலலிதா. மரியம் பிச்சை மரணத்துக்குப் பிறகு அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லை என்பதால் ராணிப்பேட்டை எம்.எல்.ஏ. முகம்மது ஜானை அமைச்சர் ஆக்கியிருக்கிறார். அதோடு துறை மாற்றமும் நடந்திருக்கிறது.
கடந்த ஆட்சியில் ஸ்டாலின் பொறுப்பு வகித்த தொழில்​துறை சண்முகவேலுவுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. கனிம வளம் என்ற கரன்சி கொட்டும் துறையும் இவரிடம்தான் இருந்தது. சண்முகவேலு இப்போது ஊரக தொழில் துறை ஒதுக்கி டம்மி ஆக்கப்பட்டு இருக்கிறார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் சிறப்புத் திட்ட செயலகத்துறை அமைச்சராக இருந்த வேலுமணி தொழில்துறை அமைச்சராகிவிட்டார். சில நாட்களுக்கு முன்பு, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதேசமயம் கோவையில் இருந்து வியாபாரி ஒருவர் ஜெயலலிதாவுக்கு எழுதிய கடிதம் பரபரப்பை கிளப்பியது. ஜூ.வி-யில் அந்த கடிதமும் வெளிவந்தது. இந்த சூழ்நிலையில்தான் வேலுமணியின் துறை மாற்றப்பட்டு உள்ளது. ''திட்ட அமலாக்கத் துறை சாதாரணமானது, அதற்குப் பதிலாக வேலுமணிக்கு தொழில்துறை கொடுத்துள்ளார்கள் அதனால் இது டம்மி போஸ்ட் இல்லை'' என்று அவருடைய ஆதரவாளர்கள் சொல்கிறார்கள்.
கருப்பசாமியிடம் இருந்த கால்நடைத் துறை சிவபதியிடம் அளிக்கப்பட்டுள்ளது. அவரிடம் இருந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை கருப்பசாமிக்கு தரப்பட்டுள்ளது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஆதிதிராவிடர் நலத் துறை என்று கொஞ்சம் வெயிட்டான போஸ்டில் இருந்தவர். இப்போது கால்நடையையும் பறிகொடுத்து விளையாட்டில் ஒதுக்கப்பட்டு இருக்கிறார்.
ஊரக தொழில் துறை அமைச்சராக இருந்த எம்.சி.சம்பத்திடம் திட்ட அமலாக்கத் துறை வழங்கி, அவரை ஓரம் கட்டி இருக்கிறார்கள். ''இரண்டு அமைச்சர்களின் அடிப்பொடிகள் பசையான வசூலில் இறங்கியதுதான் இந்த மாற்றங்களுக்கு காரணம்!'' என்கிறார்கள் கோட்டையில்.