Tuesday, June 28, 2011

விகடன் மேடை - எஸ்.ராமகிருஷ்ணன்


''ஈழப் போராட்டத்தின் வீழ்ச்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?''
''அதை வீழ்ச்சி என்று நான் ஒப்புக்கொள்கின்றவன் இல்லை. வாழ்வுரிமை பறிபோய், இன்றும் அகதிகளாக முகாமிலும் பல்வேறு தேசங்களிலும் நிர்க்கதியாக நிற்கும் மக்களின் கண்களில், பேச்சில், சிந்தனையில் ஈழப் போராட்டம் இருந்துகொண்டேதான் இருக்கிறது. இவ்வளவு பெரிய மனிதத் துயரத்தை வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த தமிழகச் சூழலைத்தான் மனிதாபிமானமற்றுப்போன வீழ்ச்சி என்று சொல்வேன்!''
பி.கீர்த்தனா, காரைப்பட்டி.
''தமிழில் நோபல் பரிசுக்குத் தகுதியான எழுத்தாளர் என்று யாரைச் சொல்வீர்கள்?''  
''கி.ராஜநாராயணன். அவர் ஓர் உன்னதமான கதை சொல்லி. மிகப் பெரிய இலக்கிய ஆளுமை. எளிய விவசாயியாக இடைசெவல் என்ற கிராமத்தில் வாழ்ந்து எழுதியவர். கிராம மக்களின் பேச்சுத் தமிழை இலக்கிய மொழியாக்கியவர். கரிசல் இலக்கியம் என்ற தனி வகையை உருவாக்கிய முன்னோடி. கிராமியக் கதைகள், பாடல்கள், சொலவடைகள், நாட்டுப்புற நம்பிக்கைகள் என்று தேடித் தேடிச் சேகரித்து, நமது வாழ்மொழி மரபைக் காப்பாற்றியவர். 
கரிசல் அகராதி என்று வட்டார வழக்கு அகராதியை உருவாக்கியவர். இடதுசாரி இயக்கங்களுடன் இணைந்து போராடிய விவசாயி. சங்கீத ஞானத்தில் விற்பன்னர். சங்கீத மேதை விளாத்திகுளம் சாமிகளின் சீடர். 50-க்கும் மேற்பட்ட கரிசல் வட்டார எழுத்தாளர்களை உருவாக்கியவர். இவரது 'கோபல்லபுர கிராமம்’ மிக முக்கியமான தமிழ் நாவல். எகிப்தின் நகுப் மக்பூஸ் (Naguib Mahfouz) நோபல் பரிசு பெற்றபோது, தமிழ் மொழியில் அவருக்கு நிகராக கி.ரா. இருக்கிறாரே என்று தோன்றியது. அந்த ஆதங்கம் எப்போதும் இருக்கிறது!''
ஏ.இசக்கி, வேலூர்.
''எத்தனையோ இசங்கள் இருக்கின்றன... அவற்றில் உங்களைக் கவர்ந்த இசம்?''
''கம்யூனிசம். எல்லா இசங்களும் அறிவாளி களுக்கானவை. கம்யூனிசம் ஒன்று மட்டுமே சாமான்ய மக்களின் நலனுக்கானது. இசங்கள்பற்றி சுந்தர ராமசாமி நீண்ட கவிதை எழுதிஇருக்கிறார். அதில் எனக்குப் பிடித்தமான வரிகள்...
'மேற்கே ரொமான்டிஸிஸம்
நேச்சரலிசம்
ரியலிசம்
அப்பால்
இம்ப்ரஷனிசம்
என் மனைவிக்குத்
தக்காளி ரசம்!’ ''
எல்.லட்சுமி, திருச்சி.
 ''இயக்குநர் பாலாவுடன் வேலை பார்த்த அனுபவம்?''
''ஒரு புத்தகம் எழுதும் அளவு நிறைய அனுபவம் பெற்றிருக்கிறேன். 'இவன்தான் பாலா’ என்று புத்தகம் வழியாகப் படித்து அறிந்த பாலாவுக்கும் பழகிப் பார்த்த பாலாவுக்கும் எந்த வேறுபாட்டையும் காண முடியவில்லை.
திறந்த புத்தகம்போலத் தன் மனதில் உள்ளதை வெளிப்படையாகப் பேசக் கூடியவர். நட்பை மதிக்கத் தெரிந்தவர். திறமையை அடையாளம் கண்டு கொண்டாடவும் மேம்படுத்தவும் கூடியவர். தான் நினைத்ததை சினிமாவில் காட்சிப்படுத்த 100 சதவிகிதம் முயற்சி செய்யும் பெர்ஃபெக்ஷனிஸ்ட். ஒருநாள் பாலாவைச் சந்திக்க எனது சிங்கப்பூர்  நண்பரை அழைத்துச் சென்றேன். அவர் பாலாவின் எளிமையை, வெளிப்படையாகத் தன்னையே கேலி செய்துகொள்ளும் பண்பைக் கண்டு, 'என்ன அண்ணே, பாலா இப்படி இருக்கிறார்!’ என்று வியந்து பேசினார். ஒன்றரை ஆண்டுகள் அவரோடு சேர்ந்து வேலை செய்தும், அந்த வியப்பு இன்றும் எனக்கும் இருக்கிறது. அதுதான் பாலா.
ஓர் இயக்குநர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு, பில்லி வைல்டர் என்ற அமெரிக்க இயக்குநர் சொன்ன பதில் இது:   A director must be a policeman, a midwife, a psycho analyst, a sycophant and a fool. இது பாலாவுக்கும் பொருந்தக்கூடியதே!''
கே.ஆனந்தன், திருத்தணி.
 '' 'எங்கள் பகல் உங்கள் இரவுகளைவிடக் கருமையானவை’ என்று பார்வையற்றவர்களின் உலகத்தைச் சொல்லும் புதினம் இதுவரை வந்துள்ளதா? விளக்கவும்?''
'' 'நிறங்களின் உலகம்’ என்று தேனிசீருடையான் ஒரு சிறந்த நாவலை எழுதிஇருக்கிறார். அவர் சிறு வயதில் பார்வைஇழந்து, அவதிப்பட்டு, பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளியில் பயின்றவர். பல ஆண்டுகளுக்குப் பிறகு, அறுவை சிகிச்சை செய்து, பார்வை கிடைத்திருக்கிறது. தனது இருண்ட வாழ்வனுபவத்தை அவர் ஒரு நாவலாக எழுதிஇருக்கிறார். மிக முக்கியமான நாவல் அது!''
ஆர்.சென்னகேசவன், ஈரோடு.
 ''அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் கலை - இலக்கியம் ஆரோக்கிய மாக இருக்கும் அளவுக்கு, தமிழகத்தில் இல்லை என்கிறார்கள் (சினிமா விதிவிலக்கு). உண்மையா?''
''உண்மையே! நாம் இலக்கியப் பெருமை பேசுகிறோமே தவிர, எழுத்தாளர்களுக்கு முக்கியத்துவம் தருவதே இல்லை. தமிழ்நாட்டில் அரசியல், சினிமா, கிரிக்கெட் - இந்த மூன்றுக்கும் தரப்படும் முக்கியத்துவம் வேறு எந்தத் துறைக்கும் தரப்படுவது இல்லை. காரணம், அதன் உடனடி பரபரப்புத்தன்மை. இலக்கியத்தையும் எழுத்தாளர்களையும் இரண்டாம்பட்சமாகவே நடத்துகிறார்கள். தமிழில் முதன்முறையாக நான் தாகூர் விருது வாங்கி இருக்கிறேன். இங்கு பெரும்பான்மை நாளிதழ்களில் அது செய்தியாகக்கூட வெளியாகவில்லை. ஆனால், அஸ்ஸாமிய எழுத்தாளர் அதே விருது வாங்கியது அங்கே முதல் பக்கச் செய்தி. அரசு அதற்காகப் பாராட்டு விழா நடத்துகிறது. கல்வி நிலையங் கள் அவரைக் கொண்டாடுகின்றன. இதே சூழல்தான் கேரளாவிலும் கர்நாடகாவிலும் இருக்கிறது.  அங்கே எழுத்தாளர்களை பப்ளிக் இன்டெலக்சுவல் என்று கருதுகிறார்கள். எல்லா முக்கியப் பிரச்னைகளிலும் கருத்து கேட்கிறார்கள், ஆலோசகர்களாக நியமிக்கிறார்கள். கேரளாவில் எழுத்தாளன்தான் தன் குழந்தையின் கையைப் பிடித்து அட்சரம் எழுதக் கற்றுத் தர வேண்டும் என்று மக்கள் வரிசையில் நிற்கிறார்கள். தமிழ்நாட்டில் எந்த எழுத்தாளருக்கும் இன்று வரை அந்த மரியாதை கிடைக்கவே இல்லை!''
பி.மூர்த்தி, திருச்செந்தூர்.
''இணையத்தின் பயன்பாடு அதிகமாகிவிட்ட சூழலில், புத்தகத்துக்கு என்று தனியாக இருக்கும் மதிப்பு குறைந்துவிடுமோ என்ற அச்சம் உங்களை எப்போதாவது சூழ்ந்து உள்ளதா?''
''ஒருபோதும் இல்லை. காரணம்,   இணையத்தின் வருகையால் தகவல்களைப் பெறுவது மட்டுமே எளிமையாகி இருக்கிறது. அதிலும், பெரும்பான்மை தகவல்களை நம்ப முடியவில்லை. பெரும்பான்மை வாசகர்கள் இன்றும் புத்தகங்களைத் தேடுகிறார்கள். இணையத்தால் புத்தகங்களின் முக்கியத்துவம் அதிகமாகிவிட்டது. நிறையப் புத்தகங்கள் விற்பனையாகின்றன. ஈபுக் ரீடர். ஐ-பேட், ஐ-போன் போன்ற உபகரணங்களில் காகிதம் இல்லாத புத்தகங்கள் பெருகி வருகின்றன. ஆனாலும், அச்சிடப்பட்ட புத்தகங்களுக்கான முக்கியத்துவம் அப்படியே இருக்கிறது.
10 கிராம் உள்ள டூத் பிரஷை என்னால்  ஐந்து நிமிடங்களுக்கு மேல் கையில் வைத்து இருக்க முடியாது. ஆனால், 'பொன்னியின் செல்வன்’ போன்ற ஆயிரம் பக்க நாவலை மணிக்கணக்கில் கையில் வைத்து, அதன் எடை பற்றிய கவனமே இல்லாமல் படிக்க முடிகிறதே, அதுதான் புத்தகத்தின் தனித்துவம். புத்தகம் என்பது வெறும் அச்சடிக்கப்பட்ட காகிதம் இல்லை. அது மனித வாழ்வின் அழியாத நினைவுத் திரட்டு. எல்லை அற்ற மனித அனுபவங்களை, நினைவுகளைத் தொகுத்து ஆவணப்படுத்தி வைத்திருப்பதே புத்தகங்களின் இருப்புக்கான முதற் காரணம். அது என்றும் மாறாதது!''
எம்.கிருஷ்ணமூர்த்தி, மதுரை.
 ''அண்ணா ஹஜாரே, ராம்தேவ் ஆகியோரின் போராட்டங்களை ஆதரிக்கிறீர்களா? இல்லை என்றால், ஏன்?''
அண்ணா ஹஜாரேவை ஆதரிக்கிறேன். அவர் ஒரு காந்தியவாதி. பல ஆண்டுகாலமாக மக்கள் சேவையில் இருப்பவர். ஆனால், பாபா ராம்தேவை ஆதரிக்கவில்லை. காரணம், அவர் ஒரு மதத் துறவி என்ற அடையாளத்தில் நடமாடும் ஆன்மிக வியாபாரி. 1,000 கோடி சொத்துள்ள ராம்தேவ் ஊழலை எதிர்க்க முன்வந்திருப்பது ஒரு சந்தர்ப்பவாத அரசியல். ஊழலுக்கு  முக்கியப் பிரச்னை, குறுக்கு வழியில்  பணம் சம்பாதிக்க நினைக்கும் பேராசை. இது அரசியல்வாதிகளுக்கு மட்டும் இல்லை, சாமான்ய மக்களுக்கும் இருக்கவே செய்கிறது. லஞ்சம்  வாங்குவதைத் தனது திறமை என்று  எண்ணும் மனப்பாங்கு நமக்குள் உருவாகி இருக்கிறது. குற்ற உணர்ச்சி இன்றி அதை நியாயப்படுத்துகிறோம். அந்தத் தொற்றுநோயின் முற்றிய நிலைதான் ஊழல். ஊழல் இன்று தேசிய அடையாளம்போல் ஆகிவிட்டது. அதற்கான எதிர்ப்பு உணர்வு ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் துவங்கப்பட வேண்டும். ஒவ்வொரு மனிதனும் ஊழலுக்கு எதிராக தான் என்ன செய்யப்போகிறோம் என்று யோசிக்கவும் செயல்படவும் வேண்டும். கடுமையான சட்டமும், சமூக அக்கறைகொண்ட ஊடகங்களும், மக்கள் சக்தியும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே இது சாத்தியம்!''
- அடுத்த வாரம்...

அட்டகாச ஜெயலலிதா.. அசத்தல் வைகோ!

ன்னை வெற்றி அடையச் செய்த ஸ்ரீரங்கம் தொகுதி மக்களுக்கு நன்றி சொல்வதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா மூன்று நாட்களும், ம.தி.மு.க. வழக்கறிஞர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வைகோ இரண்டு நாட்களும் திருச்சியில் தங்க... நகரமே திமிலோகப்பட்டது. 
ஜூன் 19 முதல் 21 வரையில் ஜெயலலிதா சங்கம் ஹோட்டலில் தங்கினார். 'ஆடம்பர வரவேற்புகள் கூடாது’ என்று முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப் பட்டதால், பிரமாண்ட கட்-அவுட்கள், ஃப்ளெக்ஸ் பேனர்கள் எதுவும் கண்ணில்படவில்லை. முதல்வர் வருகையை முன்னிட்டு சாலைகள் மணப் பெண்ணைப்போல் ஜொலிக்க... அதற்கு அழகு கூட்டுவதுபோல், கட்சிக் கொடிகள் இரு புறமும் காற்றில் படபடத்தன. திரும்பும் திசை எல்லாம் பாதுகாப்புக்கு போலீஸார் குவிக்கப்பட, ஆங்காங்கே கட்சிக்காரர்கள் 'அம்மா’ தரிசனத்துக்காக காத்துக் கிடந்தனர்.
முதல் நாள் ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சென்று அரங்கனை தரிசித்த ஜெய லலிதா, அன்று மாலை அரசு விழாவில் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட பகுதி களுக்கு, 190 கோடிகள் மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, மக்களை மலைக்க வைத்தார். அடுத்த இரண்டு நாட்களும் கிராமம் கிராமமாகச் சென்று மக்களுக்கு நன்றி தெரிவித் தார். முதியவர்கள் நின்றால், வாகனத்தை நிறுத்தி அவர்கள் கொடுக்கும் மனுக்களை முதல்வர் பெற்றுக்கொண்டார். பேசத் திட்டமிடாத இடங்களிலும் மக்கள் கூட்டமாக நின்றால், வாக னத்தை நிறுத்திப் பேசினார்.
முதல்வரின் கொண்டாட்டக் களேபரம் முடிய... ஜூன் 25-ம் தேதி, ம.தி.மு.க. வழக்கறிஞர்கள் மாநாட்டுக்காக தயாராகத் தொடங்கியது திருச்சி. அ.தி.மு.க-வினர் விட்டுவைத்து இருந்த மிச்சம் மீதி இடங் களில் ம.தி.மு.க-வினர் தங்கள் கட்சிக் கொடிகளைக் கட்டி வைத்தனர். முந்தைய தினமே பல்வேறு ஊர்களில் இருந்து வந்த வழக்கறிஞர்கள், நகரின் வீதிகளில் உலா வரத் துவங்கினர்.
ஒரு நாள் முன்னதாக வந்து விட்ட வைகோவும், திருச்சியின் பல்வேறு இடங்களில், கட்சியின் 18-ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கட்சி கொடி ஏற்றி, பள்ளிக் குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங் கினார். லால்குடி ஒன்றியச் செயலாளர் மைக்கேல் ராஜ் மகள் மேரி ராஜ ஷீலாவுக்கு 26-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருமணம். எனவே, மணமக் களை முன்கூட்டியே வாழ்த்திச் சென்றார். அடுத்த நாள் வழக் கறிஞர்கள் மாநாட்டில் காலை முதல் இரவு வரை கலந்து கொண்டு இரவு திருச்சியில் இருந்து கிளம்பினார்.
இந்த நேரத்தில், 'கட்சிப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க ஒரு நாள் பயணமாக தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வருகிறார்’ என்று அறிவிக்கப் படவே, 'இரண்டு கழகங்களையும் மிஞ்சும் வகையில் திருச்சியை திக்கு முக்காட வைக்கிறோம்’ என்று சவால்விட்டனர் தி.மு.க. தொண்டர்கள். ஆனால் ஸ்டாலின் வருகை திடீரென ரத்தாகவே, அவர்கள் சோக மாகிப் போனது தனி டிராக்!

சமம் இல்லாத கல்வி சமச்சீர்க் கல்வி ஆகுமா?



ஜோதிமணி
மச்சீர் கல்வி பற்றிய சர்ச்சைகள் தமிழகத்தில் தூள் பறக்கிறது! 'அது தேவையா, இல்லையா... நடைமுறைப்படுத்தப்படுமா, படாதா... புத்தகங்கள் அச்ச​டிக்கச் செலவான 200 கோடிக்கு யார் பொறுப்பு...அந்தப் பாடத் திட்டம் உண்மை​யாகவே சமச்சீர் கல்விக்கு உத்தரவாதமானதா... சென்ற அரசின் திட்டங்களில் ஒன்றான இதை, இந்த அரசைத் தொடரச் சொல்லி வற்புறுத்துவது நியாயமா?'' - இப்படி ஏகப்பட்ட கேள்விகள்!
ஆனால், இந்த மேலோட்டமான விவாதங்களில் எல்லாம் உண்மையான சமச்சீர் கல்வி அமிழ்ந்து, ஆழப் போய்விட்டதே நிஜம்! எது சமச்சீர் கல்வி? அது எந்த வகையில் தேவை?
முதலில், பள்ளிகள். அடிப்படை வசதிகள் இல்லாத, எட்டாம் வகுப்பிலும் எழுத்துக் கூட்டிப் படிக்கிற நிலையில் மாணவர்களை வைத்திருக்கிற, சரியான கழிப்பறைகளோ, விளையாட்டு மைதானங்களோ இல்லாத, அதன் அவசியத்தைக்கூட உணராத, 'வேறு கதியற்ற கடைக்கோடி மக்களின் கனவுகளுக்கு ஒரே புகலிடம்’ என்ற அளவில் மட்டுமே உயிர்த்திருக்கும் அரசுப் பள்ளிகள் ஒரு புறம்...
எவ்வித விதிகளுக்கும் உட்படாமல் அலட்சியப்​படுத்தி, முறையான கட்டடங்களோ, தகுதியான ஆசிரியர்களோ இல்லாத, அப்படி இருந்தாலும் அவர்களை ஈவிரக்கம் இல்லாமல் சுரண்டுகிற, புற்றீசல்போல் பெருகும் ஆங்கிலப் பள்ளிகள் மறு புறம்!
பள்ளி வளாகத்தில் தாய்மொழியில் பேசினாலே அபராதம் விதிக்கிற, 10, 12-ம் வகுப்புப் பாடங்களை 8-ம் வகுப்பில் இருந்தே சொல்லித்தருகிற அதீதப் பொறுப்பு உணர்வு மிகுந்த, அதற்கு விலையாகப் பெற்றோர்களின் ரத்தத்தையே உறிஞ்சுகிற ஆங்கில மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இன்னொரு புறம்!
இதுதான் இன்றைய தமிழகம்!
கல்வி பற்றிய ஏராளமான கனவுகளோடு நம்​முடைய குழந்தைகள் வளர்கிறார்கள். அந்தக் கனவுகள்தான் நாளை நம் தேசத்தை வழிநடத்தப்​போகிறது. அவர்களுக்குப் பள்ளிகளின் இன்றைய நிலை பெரும் ஏமாற்றமே. உண்மை இப்படி இருக்க, 'பாடத் திட்டத்தை மாற்றுவதால் மட்டுமே சமச்சீரான கல்வியைக் கொண்டுவந்துவிட முடியுமா?’ என்பதுதான் இன்று தலைதூக்கும் அடிப்​படையான கேள்வி.
தரமான, தொலைநோக்குப் பார்வைகொண்ட, வேகமாக மாறி வரும் காலத்துக்கு ஈடுகொடுக்கக்கூடிய, அறிவியல்பூர்வமான, நமது தாய்மொழி - பாரம்பரியத்தை அடிப்படையாகக்கொண்ட, அனை​வருக்கும் சம வாய்ப்பு வழங்குகிற ஒரு கல்விக் கொள்கைதான் இன்றைய முதல் தேவை. அதுதான் முழுமையான சமச்சீர்க் கல்வியாக இருக்க முடியும். அப்படிப்பட்ட கல்வியைக் கொண்டுவந்தார்களா என்றால் இல்லை!
கல்வி, சமூக முன்னேற்றத்தின் முக்கியஅங்கம். தலித்துகள், பெண்கள், மலை சாதியினர் மற்றும் ஒடுக்கப்பட்ட அனைத்துப் பிரிவினரின் முன்னேற்​றமும், தரமான கல்வியின் மூலம்தான் சாத்தியம். அதை இலவசமாகப் பெறுவது, அனைவரது உரிமை. அதைத் தருவதுதான் அரசின் கடமை!
பெருந்தலைவர் காமராஜர் இதை நன்கு உணர்ந்து, தொலைநோக்குப் பார்வையோடு இலவசக் கல்விக்கு அடிப்படையான ஆரம்பப் பள்ளிகளைத் திறந்தார். கல்விக்கு வறுமையும் பசியும்கூட தடைஎன்பதை உணர்ந்து, மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு​வந்தார்.
அன்றும் தனியார் பள்ளிகள் இருந்தன. ஆனால், கல்வியை வியாபாரமாக மாற அனுமதிக்கவில்லை. பணப் புழக்கம் அதிகம் இல்லாத அன்றைய சூழலில், தரமான கல்வி இலவசமாக வழங்கப்பட்டது. அன்றைய தனியார் பள்ளிகளும் சமூகத்துக்கான அறப் பணியாகவே திகழ்ந்தன.
துரதிர்ஷ்டவசமாக, அடுத்தடுத்து வந்த அரசுகள் கல்வி வியாபாரமாக மாறியதைத் தடுக்கத் தவறி​விட்டன, நியாயமான கட்டுப்பாடுகளையும் விதிக்க​வில்லை. மேலும், அரசுப் பள்ளிகளில் கவனம் செலுத்தாமல், அதன் தரம் நாளுக்கு நாள் குறைந்து வந்ததையும் தடுக்கவில்லை. அதனால்தான் இன்று, எப்பாடு பட்டாவது தன் குழந்தைகளை நன்கு படிக்கவைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிற பெற்றோர், இரக்கமற்ற தனியார் பள்ளிகளிடம் சிக்கிக் கண்ணீர் சிந்துகின்றனர்!
அதற்கும் வழி இல்லாத பெற்றோர்கள்தான் அரசுப் பள்ளியை அண்டுகிறார்கள். இப்படி, வசதியானவர்கள் மட்டுமே தரமான கல்வியையும், நல்ல வேலை வாய்ப்பையும் பெற முடியும் என்பது அநீதியானது, ஆபத்தானது!
இந்த நிலையை மாற்ற, உடனடி முயற்சி எடுத்தே ஆக வேண்டும். இப்போதைக்கு பாடத் திட்டத்தையாவது மாற்றுவோம் என்கிற சமாதானம், நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வது ஆகும். மற்ற சீரழிவுகளை எப்போது மாற்றுவது? முத்துக்குமரன் கமிட்டி அறிக்கையில் குறிப்பிட்​டுள்ள மற்ற சீர்திருத்தங்களையும் உடனடியாகப் பரிசீலித்து அமல்படுத்த வேண்டும். குறிப்பாக, பள்ளிக் கட்டணம் முறைப்படுத்தப்பட வேண்டும். இதற்கு எதிராகச் சொல்லப்படுகிற எந்த சமாதானமும் ஏற்கக்கூடியது அல்ல.
கல்வி, தனி மனித வாழ்விலும் சமூகத்தின் முன்னேற்றத்திலும் மிக முக்கியமான ஒரு காரணி. அதில் அரசியல் மாச்சரியங்களுக்கு எந்த இடமும் இருக்கக் கூடாது. அரசியலுக்கு அப்பாற்பட்டு, அரசும் அனைத்துக் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் ஒன்று சேர்ந்து, ஒரு புதிய கல்விக் கொள்கையை ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் உருவாக்குவதும், செயல்​படுத்துவதும் இந்தத் தருணத்தில் மிகவும் முக்கியம். இதில் மேலும் ஏற்படுகிற தாமதம், மக்களுக்குக் கஷ்டத்தையும் நெருக்கடியையும் ஏற்படுத்துவதோடு, சமூகத்தில் மோசமான பின்விளைவுகளையும் ஏற்படுத்திவிடும்.
நல்லோர் எல்லோர் கவனத்துக்கும்!

இந்தத் தோல்விக்காக ஜெயலலிதாவுக்கு நன்றி..

ட்டப் பேரவை தேர்தல் தோல்விக்குப் பிறகு நடந்த தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக்குழுவின் தீர்மானங்களை, விளக்குவதற்குப் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகிறது. காஞ்சிபுரத்தில் நடந்த கூட்டத்தில், தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் கலந்து கொண் டார். 
அன்பழகனுக்கு முன் பேசிய கம்பம் செல்வேந்திரன் சீரியஸாகவே தொடங்கினார். தி.மு.க-வுக்கு வெற்றியும் தோல்வியும் சகஜம் என்ற ரீதியில் பேசிய அவர், ''67-ம் ஆண்டு நடந்த தேர்தல் ஓட்டு எண்ணிக்கைக்கு முன்தினமே, காமராஜரை சந்தித்து மாலை அணிவித்து வாழ்த்துச் சொன்னார், காவல் துறை அதிகாரி ஒருவர். 'எதுக்கு அவசரம் ஒரு நாள் பொறுக்கக்கூடாதான்னேன்?’ என்று காமராஜர் அவரைக் கடிந்து கொள்ள... அதற்கு அந்த அதிகாரி மிகுந்த நம்பிக்கையுடன், 'நாளைக்கு மதியம் நீங்க பிஸியாயிடுவீங்க அதான்...’ என்றார்.
ஆனால், அடுத்த நாள் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. தி.மு.க. ஆட்சியைப் பிடித்து விட்டது!'' என்றார் செல்வேந்திரன்.
சுவாரஸ்யமாக இதைக் கேட்டுக்கொண்டு இருந்த அன்பழகன் குறுக்கே புகுந்து, ''அந்த அதிகாரி பேரைச் சொல்லுய்யா...'' என்றார். ஆனால், அந்த போலீஸ் அதிகாரியின் பெயர் தெரியாமல் முழித்த செல்வேந்திரன், ''அருளா?'' என்று பேராசிரியரிடமே கேட்டார். இல்லை என்று அன்பழகன் தலையாட்ட... சங்கடப்பட்ட செல்வேந்திரன், ''மகாதேவன் தானே...'' என்று மீண்டும் ஒரு கேள்வியை பேராசிரியர் முன் வைத்தார். அதற்குமேல் அவரை சங்கடப்படுத்த விரும்பாத அன்பழகன், ''ஐ.ஜி. பார்த்தசாரதி'' என்று சொல்ல... தொண்டர்களிடம் இருந்து பலத்த கைதட்டல்.
கம்பம் செல்வேந்திரனுக்குப் பிறகு மைக் பிடித்த அன்பழகன், ''தமிழகம் முழுக்க ஏற்பட்ட தோல்வியைக்கூட நான் ஏத்துக்கிட்டேன். ஆனால், காஞ்சியில் அடைந்த தோல்வியை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. பொதுவாக, நம்ம கட்சியில ஏரியாவுக்கு ஒரு தளபதிதான் இருப்பாங்க. ஆனா, காஞ்சிபுரத்தில் எண்ணிலடங்காத தளபதிங்க. தேர்தலப்போ மத்த தொகுதியைவிட இங்கிருந்துதான் அதிகம் மனுக்கள் வரும். கடைசியில கோட்டை விட்டுட்டீங்களே...'' என்று சற்றே நிறுத்தி ஆதங்கப்பட்ட அன்பழகன், ''இந்தத் தோல்வியை ஒரு வகையில் நல்லது என்பேன்...'' என்று சொல்லவே, தொண்டர்கள் சற்று மிரண்டனர். ''நம்மைப் பொறுத்த வரை தோல்வி அடையும்போதுதான் நம்மிடம் ஒற்றுமை தென்படும். வெற்றி அடையும்போது பிரிஞ்சு போயிடுறோம். வெற்றி நம்மைப் பிரிக் கிறது, தோல்வி நம்மை இணைக்கிறது!'' என்று விளக்கிய அன்பழகன், ''அண்ணா தோற்றபோது நான்கூட கவலைப்பட்டேன். ஆனால், அது நல்லதாகப் போய்விட்டது. தோற்றதால்தான் அவர் நாடாளுமன்றத்துக்குச் சென்றார். தி.மு.க. கொள்கைகள் இந்திய அளவில் சென்று சேர்ந்தது. அண்ணாவின் திறமையை அறிந்த ராம் மனோகர் லோகியா என்ற முதுபெரும் தலைவர் என்னிடம் ஒரு முறை, 'உங்க அண்ணாவை குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் நிற்கச் சொல்லுங்க!’ என்றார். அண்ணாவிடம் இதைச் சொன்னபோது சிரித்துக்கொண்டே 'இதுக்குதான்யா டெல்லி போகமாட்டேன்னேன். இன்னும் என்னை எங்கெங்கே போகச் சொல்வீங்களோ?’ என்று அண்ணா சொன்னார்'' என்று வரலாற்றின் பக்கங்களைத் திருப்பிய அன்பழகன்...
பின்னர், திராவிடர் - ஆரியர் பிரச்னைக்கு வந்தார். ''நாம எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் வைதீக அகராதியில சூத்திரர்கள்தான். ஒவ்வொரு இனமும் எங்கெங்கே பிறந்தவங்கன்னு பிராமணன் வகுத்து வெச்சிருக்கான். தொடை, பாதம்ன்னு கண்ட கண்ட இடங்களைச் சொல்வாங்க. இவனுங்க எங்கேடா பிறந்தாங்கன்னு கேட்டா, நாங்க எல்லாம் ஒரிஜினல் ப்ளேஸ்லதான் பிறந்தோம்ங்கறான்'' என்றபோது பேசுவது பேராசிரியர்தானா? என்று மேடையில் இருந்தவர்களே கிள்ளிப்பார்க்கும் நிலைக்குப் போனார்கள்.
பத்திரிகைகளையும் ஒரு பிடி பிடிக்கத் தவறவில்லை அன்பழகன். ''உண்மையில் இது ஜெயலலிதாவுக்கு கிடைத்த வெற்றி என்று சொன்னால் நான் நம்ப மாட்டேன். ஜெயலலிதா வெறும் அம்பு மட்டும்தான். வெற்றி பெற்றிருப்பது 'துக்ளக்’ சோவும் 'தினமணி’ வைத்தியநாதனும்தான். நாம் இலவசங்களைத் தந்தபோது மக்கள் வரிப்பணம் வீணாகுதுன்னு மூக்கை சிந்தினவங்க எல்லாம் இப்போ, அம்மா அறிவிச்சதை எல்லாம் நான்கு மாதத்தில் தந்திடுவாங்க... ஆறு மாதத்தில தந்திடுவாங்கன்னு பக்கம் பக்கமா ஜோசியம் எழுதிக்கிட்டு இருக்காங்க. கண்டிப்பா கொடுப்பாங்க அம்மா... அம்மா தராம விட்டுட்டாலும் இவங்க அதை வாங்கித் தந்திடுவாங்க போல இருக்கு. தி.மு.க., தேர்தல் அரசியலை நோக்கி இயங்கும் கட்சியல்ல. இது சமூக நீதிக்கான ஓர் இயக்கம். பகுத்தறிவு இயக்கம். ஒரு வகையில் இந்த தோல்விக்காக நாம் ஜெயலலிதாவுக்கு நன்றி சொல்ல வேண்டும். காரணம், இப்போதுதான் நாம் மக்களுக்கு முழுநேர சேவை செய்யும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மக்களை மயக்கியதால் கிடைத்த வெற்றி இது. அந்த மயக்கத்தைப் போக்கும் விதத்தில் இனி நம் பணி இருக்க வேண்டும்!'' என்று வேண்டுகோளோடு தனது பேச்சை முடித்துக் கொண்டார் அன்பழகன்.
தோல்விக்கு ஆறுதல் சொல்கிறாரா அல்லது நையாண்டி செய்கிறாரா என்று புரியாமலே உடன்பிறப்புகள் கலைந்து சென்றார்கள்.
- கிருபாகரன்

பாபா அறக்கட்டளையில் தகிடுதத்தங்கள்!''

பாபா அறக்கட்டளையில் தகிடுதத்தங்கள்!''
ஜூலை 15-ல் மர்மம் அவிழ்ப்பாரா ஐசக் டிக்ரீட்?
'நம்பிக்கையை வளர்த்துக்​கொள்ளுங்கள். வெளி உலக வாழ்வில் எத்தனையோ சூழ்நிலைகள் நம்மைப் பாதிக்கின்றன. அந்தச் சூழ்நிலைகள் நம்மைத் தாக்காதபடி, நம்பிக்கையே கவசம்போல பாதுகாக்கும். சோதனைகளையும், விரும்பி ஏற்கும் பக்குவத்​தையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்’ - தன் பக்தர்களுக்கு ஸ்ரீசத்ய சாயி​பாபா அடிக்கடி சொல்லி வந்த அருள்வாக்கு  இது. அவரது மறைவுக்குப் பிறகு ஆசிரமத்துக்கு வந்திருக்கும் சோதனைகளை, யாருடைய நம்பிக்கை காப்பாற்றும் என்பதுதான் இப்போதையை கேள்வி.
புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் சாயி​பாபா தங்கி இருந்த யஜுர் மந்திர் அறையில் கோடிக்கணக்கில் பணமும், கிலோ கணக்கில் தங்கமும், வெள்ளியும் எடுக்கப்பட்டு பரபரப்பு கிளம்பியது. அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள், கூடுதலாக அதிர்ச்சி அளிக்கின்றன!
ஸ்ரீசத்ய சாயி அறக்கட்டளைக்கு சொந்தமான காரை சோதனைச் சாவடியில் பெங்களூரு போலீஸார் சோதனை நடத்தியபோது, மூட்டை மூட்டையாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. காரில் பயணம் செய்த அறக்கட்டளை உறுப்பினரின் கார் டிரைவர் மற்றும் பாபாவின் சமாதியை வடிவமைக்கும் இன்ஜினீயர்கள் ஹரீஷ் நந்தா ஷெட்டி, சுகான் ஷெட்டி ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, பணம் முழுக்க பிரசாந்தி நிலையத்தில் அறை எண் 6-ல் இருந்துகொண்டு வரப்பட்டதாக தகவல் சொல்லி இருக்கிறார்கள். அந்த அறையில் தங்கி இருந்தது, பாபாவின் சொந்த சகோதரர் மகனும், அறக்கட்டளையின் தலைவருமான ஆர்.ஜே.ரத்னாகர்.
இதைத் தொடர்ந்து பாபா அறக்கட்டளைக்குச் சொந்தமான ஆம்னி பஸ் ஒன்றையும் போலீஸார் சோதனையிட, அதிலும் 10 கோடி பணம் சிக்கியது.
புட்டபர்த்தியில் கடை வைத்திருக்கும் கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவரிடம் பேசினோம். ''பாபாவோட மறைவுக்குப் பிறகு ஆசிரமத்தில் நடக்கும் எல்லா விஷயங்களும் மர்மமா இருக்கு. அதேபோல, இங்கே வரும் பக்தர்களின் கூட்டமும் இப்போது சுத்தமா நின்னுடுச்சு. தெருக்கள் வெறிச்சோடிக்கிடக்குது. கடையில் ஒரு நாளைக்கு 100-க்குக்கூட வியாபரம் இல்லை. கடையை மூடிட்டு வேற ஊருக்கு கிளம்பலாம்னு முடிவுக்கு வந்திருக்கோம்...'' என்றவர், ''பாபா இறந்த நாளில் இருந்தே ஆசிரமத்தில் இருந்து ஏகப்பட்ட லாரிகளும், பஸ்களும் வெளியில் போயிட்டே இருந்தன. அவற்றில் பணம்தான் கடத்தி இருப்பாங்கன்னு எங்களுக்கு சந்தேகமா இருக்கு.
வெளி ஆட்கள் யாரும் ஆசிரமத்துக்குள் நுழைஞ்சு ஒரு துரும்பைக்கூட எடுத்துக்கிட்டுப் போக முடியாது. எல்லாமே உள்ளே இருக்கும் சில ஆட்களோட துணையோடுதான் நடந்துட்டு இருக்கு. திருப்பதிபோலவே பிரசாந்தி நிலையத்தையும் ஒரு தேவஸ்தான அமைப்பின் கீழ் கொண்டுவர அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!'' என்று கோரிக்கை வைத்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக ஆர்.ஜே.ரத்னாகர், ''காரிலும் பஸ்ஸிலும் கொண்டுபோன பணம் பக்தர்களுடையது. அதற்கும், ஆசிரமத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பறிமுதல் செய்யப்பட்ட பணம் நீதிமன்றத்தில் இருக்கிறது. அதைப்பற்றி விசாரணை நடக்கிறது. ஆசிரம உறுப்பினர்கள் இங்கு இருந்து கோடிக்கணக்கில் பணத்தைக் கடத்துவதைப்போல சிலர் குற்றம் சாட்டுகிறார்கள். அதில் துளிகூட உண்மை இல்லை. நாங்கள் அனைவருமே பாபாவுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள்!'' என்கிறார் உருக்கமாக.
அமெரிக்க கோடீஸ்வரர் என்று அடையாளம் காட்டப்பட்ட பாபாவின் தீவிர பக்தரான ஐசக் டிக்ரீட் என்பவர், ''பாபா அறக்கட்டளையில் நடக்கும் தகிடுதத்தங்கள் பற்றிய திடுக்கிடும் உண்மைகள் அத்தனையும் ஆதாரத்தோடு என் கையில் இருக்கின்றன. ஜூலை 15-ம் தேதி குரு பூர்ணிமா அன்று மீடியாக்கள் முன்னிலையில் அத்த​னையும் பகிரங்கப்படுத்துவேன். அப்போது பலரது முகத் திரைகள் கிழியும்!'' என்று மிரட்டி இருக்கிறார்.
ஆந்திர அரசியல் தலைவர்களின் பார்வையும் பாபா ஆசிரமத்தின் மீது ஆழப் பதிந்திருக்கிறது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, ஆசிரமத்துக்கு திடீரென சென்று, ரத்னாகருடன் பேசி, தனது ஆதரவுக் கரத்தை நீட்டிவிட்டு வந்தார். தெலுங்கு தேசம் கட்சியோ, 'பாபாவின் ஆசிரமத்தை அரசாங்கம் கைப்பற்ற வேண்டும். சொத்துகள் பற்றி விசாரணை நடத்த தனி விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்!’ என கோரிக்கை வைத்திருக்கிறது.
ஆந்திர முதல்வர் கிரண்குமார், தலைமைச் செயலாளர் மற்றும் வருமான வரித் துறை அதிகாரிகளுடன் திடீர் ஆலோசனை நடத்தி இருக்கிறார். சாயி பாபா ஆசிரமத்துக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த 16 முக்கிய சலுகைகளை உடனடியாக ரத்து செய்ய ஆந்திர அரசு முடிவு எடுத்திருக்கிறதாம்.
'வாழும் காலத்திலேயே வாயில் இருந்து லிங்கம்... கையில் இருந்து விபூதி...’ என சர்ச்சைகளையும் புகழையும் மாறி மாறி அடைந்தவர் சாயி பாபா. அவர் இறந்த பிறகும் தொடரும் சர்ச்சைகள் எப்போது முடிவுக்கு வரும் என்பதற்குத்தான் விடை தெரியவில்லை!
- கே.ராஜாதிருவேங்கடம்

கொந்தளித்த ஆ.ராசாவின் மனைவி!

கொந்தளித்த ஆ.ராசாவின் மனைவி!

''அவரைப்பத்தி இஷ்டத்துக்கு எழுதி உள்ளே தள்ளிட்டீங்களே!''
டெல்லி திகார் சிறை வட்டாரத்தில் உலா வந்த ஆ.ராசாவின்உறவுக் காரர்களை, திருச்சி வருமான வரித் துறை விசாரணைக்காக அழைத்தது!
ஜூன் 24-ம் தேதி, காலை 10.35-க்கு ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி, ஆ.ராசாவின் சகோதரர் ராமச்சந்திரன், அக்கா மகள் வித்யா, அக்கா மகன்கள் பரமேஸ்வரன், வெங்கடேசன் ஆகியோர் இரண்டு கார்களில் வந்து இறங்கினர். அவர்களைச் சூழ்ந்து பளிச் பளிச்சென ப்ளாஷ் அடிக்க... இத்தனை மீடியாக்களை எதிர்பாராத அவர்கள், அதிர்ச்சி அடைந்தனர். ''அவரைப் பத்தித்தான் இஷ்டத்துக்கும் எழுதி ஜெயிலுக்கு அனுப்பிட்டீங்க... அப்புறம் இன்னும் ஏன் எங்களைத் தொல்லை பண்றீங்க?'' என்று சீறியபடி, அலுவலகத்தின் உள்ளே சென்றார் பரமேஸ்வரி.
அடுத்து வந்த ராமச்சந்திரனை சூழ்ந்து​கொண்ட நிருபர்கள், ''எதற்காக ஆஜராகச் சொல்லி உத்தரவு வந்துள்ளது? யார் யார் ஆஜர் ஆகிறீர்கள்?'' என்று கேட்க, ''உங்களுக்கு யார் தகவல் சொன்னார்களோ, அவர்களிடமே போய் விசாரித்துக்கொள்ளுங்கள்!'' என்று முறைத்தார்.
சற்று நேரத்துக்குப் பின்னர் அவர்களுடன் வந்த ஆடிட்டர்கள், ''வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ததில் சில சந்தேகங்கள் என்று பரமேஸ்வரியையும் ராமச்சந்திரனையும் வரச் சொல்லி இருக்கிறார்கள். சந்தேகங்களை நிவர்த்தி செய்ய தினந்தோறும் நூற்றுக்கணக்கானோரை வருமான வரித் துறையினர் வரச் சொல்லி விசாரிப்பது சாதாரண விஷயம்தான்...'' என்று விளக்கம் சொன்னார்கள்.
பரமேஸ்வரி விசாரணைக்காகச் சென்ற சிறிது நேரத்திலேயே, வித்யாவும் வெங்கடேசனும் காரில் ஏறி புறப்பட்டுச் சென்றனர். பரமேஸ்வரியிடம் மதியம் வரையும், ராமச்சந்திரனிடம் மாலை வரையும் விசாரணை நடந்தது. 
இது தொடர்பாக விவரம் அறிந்த வட்டாரத்தில் பேசியபோது, ''இருவரிடமும் வருமானத்துக்கு அதிகமான சொத்துகள் இருக்கின்றன. ஆகவே, அவர்களிடம் ஆரம்பத்தில் விசாரணை நடத்தப்பட்டது. ஆ.ராசா கைதுக்கு முன்னர், பெரம்பலூர் மற்றும் திருச்சியில் அவரது சகோதர, சகோதரிகள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் புகுந்து ரெய்டு நடத்திய சி.பி.ஐ. டீம், பல முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றிச் சென்றது. சொத்துகள் வாங்குவதற்கான வருமானம் எப்படிக் கிடைத்தது என்பது குறித்தும் விசாரணை நடந்தது. பரமேஸ்வரி மற்றும் ராமச்சந்திரன் சொன்ன பதில்களில் விசாரணை அதிகாரிகளுக்கு முழுத் திருப்தி ஏற்பட்டதாகத் தெரியவில்லை. விரைவில் மற்ற உறவுகளையும் அதிகாரிகள் விசாரணைக்கு அழைப்பார்கள்!'' என்றனர்.
இதுகுறித்து நாம் ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரியின் செல்போனில் தொடர்பு கொண்டோம். அது, ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. திருச்சியில் இருக்கும் ராசாவின் சகோதரர் கலியபெருமாளிடம் பேசினோம். ''உங்களிடம் பரமேஸ்வரி எதுவும் பேசமாட்டார். எங்கள் கருத்தையும் சொல்ல விரும்பவில்லை!'' என்று கூறினார்.
- ஆர்.லோகநாதன்
படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்
வருமான வரித் துறை அலுவலகத்துக்கு வந்திருந்த ஆ.ராசாவின் குடும்ப உறுப்பினர்களைப்பற்றி சிறு குறிப்புகள்.
பரமேஸ்வரி: ஆ.ராசாவின் மனைவி. சாதிக் பாட்சா நிர்வாக இயக்குநராக இருந்த க்ரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில், அதன் டைரக்டர் பொறுப்பில் இருந்தார். பின்னர் விலகிவிட்டார்.
ராமச்சந்திரன்: ஆ.ராசாவின் குடும்பத்தில் மூத்த ஆண். ஐ.எஃப்.எஸ். அதிகாரியான இவர், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பணியாற்றி இருக்கிறார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பருவநிலை மாற்றத் துறையின் இயக்குநராகப் பணியாற்றுகிறார்.
பரமேஸ்வரன்: ஆ.ராசாவின் மூத்த அக்காள் விஜயாவின் மகன். அம்மா விஜயா, அப்பா பச்சைமுத்து இருவரும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள். க்ரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனத்தில் சாதிக் பாட்சா எம்.டி-யாக இருந்தபோது, இவர் ஜே.எம்.டி. பொறுப்பில் இருந்தார். சாதிக் பாட்சாவின் மறைவுக்குப் பின்னர் இவர்தான் எம்.டி. சாதிக்பாட்சா தரப்பில் சுப்புடு என்கிற சுப்பிரமணியனுக்கும் முக்கியப் பொறுப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. செக்கில் கையெழுத்துப் போடும் அதிகாரம் இந்த இருவருக்கும்தான். இது வரை 2ஜி ஸ்பெக்டரம் விவகாரத்தில் பரமேஸ்வரன் விசாரிக்கப்படாமல் இருப்பது, விவரம் அறிந்தவர்கள் வட்டாரத்தில் ஆச்சர்யமாக விவாதிக்கப்படுகிறது.
வித்யா: ஆ.ராசாவின் சகோதரி கமலாவின் மகள். தந்தை அரங்கராஜன், கிராம நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். எம்.சி.ஏ. பட்டதாரியான இவர் சென்னையில் சி.டாக் என்ற ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிகிறார். இது பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்குத் தேவையான மென்​பொருட்களை உற்பத்தி செய்து தருகிறது.
வெங்கடேசன்: ஆ.ராசாவின் சகோதரி சரோஜாவின் மகன். பி.எஸ்.என்.எல். நிறுவன திருச்சி மண்டல அலுவலகத்தில் அக்கவுன்ட் ஆபீஸராகப் பணியாற்றுகிறார். ஆ.ராசா அமைச்சராக இருந்தபோது, இரண்டு வருட காலமாக டெலிகாம் டிபார்ட்மென்டில் அசிஸ்டென்ட் பிரைவேட் செக்ரெட்​டரியாக டெல்லியில் பணியாற்றினார்.

கனிமொழி அப்பாவி!''


நந்தி சாமியாக மாறிய அதிபன் போஸ்
முழங்கால் அளவுக்கு காவி... மிடுக்கு குறைந்த முகம்... அசட்டை​யான சிரிப்பு... ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த தொழில் அதிபர் அதிபன் போஸா இவர்? கனிமொழி​யுடன் திருமணம், விவா​கரத்து என பரபரப்புப் புள்ளியாக இருந்த அதிபன், இப்போது ஆன்மிக அவதாரம் எடுத்து இருக்கிறார். சித்தர் குரு அய்யாவின் அடியவராகத் தன்னைச் சொல்லிக்கொள்ளும் அதிபன் போஸ், அவருடைய மந்திரங்களைப் பாடல்களாக்கி சி.டி-யாக வெளியிட்டு இருக்கிறார்.
நந்தி சாமியாக தன்னை மாற்றிக்கொண்ட அதிபன் போஸிடம், ''என்ன, இப்படி மாறிட்டீங்க?'' எனக் கேட்டோம்.
''மாற்றம்கிறது நல்ல விஷயம்தானே... இதில் அனுதாபப்பட என்ன இருக்கு? நாம மட்டும் இல்லை... இந்த மரம், மண் எல்லாமே மாறிட்டுத்தான் இருக்கு. 'எல்லாம் நிரந்தரம்’னு நாம கற்பனை பண்ணிட்டு அலையுறோம். ஒரு கட்டத்தில் அந்த நினைப்பு தவிடுபொடியாகிடுது; வாழ்க்கையோட உண்மை புரியுது. இந்த அதிபன் மாறியதும் அப்படித்தான்!'' என்றபடி பலமாகச் சிரிக்கிறார்.
''இந்த ஒலிநாடா மூலமாக என்ன சொல்லப்​போகிறீர்கள்?''
''மனிதத்தன்மை உள்ளவங்க இந்த உலகுக்கு ஏதாவது செய்யணும். நம்மை நாமே உணர்ந்துகொள்ளும் பக்குவத்தை இந்தப் பாடல்கள் உணர்த்தும். குரு பூர்ணிமா நேரத்தில் பாடப்பட்ட இந்தப் பாடல்கள் 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சித்தர்களின் சிந்தையில் உதித்தவை.''
''கனிமொழி வழக்கைக் கவனிக்கிறீர்களா?''
''கனிமொழி நல்லவங்க. எதை செய்யும்போதும் ஜாக்கிரதையா இருப்பாங்க. ஆனால், அடுத்தவங்​களோட அட்வைஸுக்குத் தலை வணங்குறவங்க. எங்கள் மண வாழ்க்கை ஒரு வருஷம்தான். அப்புறம் பிரிஞ்சுட்டோம். ஆண்டவன் நடத்தும் விளையாட்டுகள் எல்லாமே அனுபவங்கள்தான். 1,000 வருடங்களுக்கு உரிய அனுபவங்களை நான் கத்துக்கிட்டது கனிமொழியின் பிரிவுக்குப் பிறகுதான். யாரும் யாரோட வாழ்க்கையிலும் தலையிட முடியாது. சில பிரிவுகளுக்குப் பின்னால்தான் அது புரியுது. வேறு என்ன சொல்றது?''
''கனிமொழி திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதை எப்படிப் பார்க்கிறீங்க?''
''ஆறுதல் சொல்லும் நிலையில் நான் இல்லை. இது எல்லாம் நேரத்தால் உண்டாகிறது. நாளைக்கே கடந்து போய்விடும். நித்தியானந்தா மிகுந்த அறிவார்ந்த ஆள். அவரைக் கடவுளாகவே மக்கள் கும்பிட்டாங்க. ஆனா, இன்னிக்கு என்னாச்சு? அவரைப் பார்க்கிறதே பாவம்னு நினைக்கிற அளவுக்குப் பேசுறாங்க. நாம எப்பவும்போல நார்மலாக இருந்தாலும், நம்ம சூழ்நிலை நமக்கு வேறு பிம்பத்தைக் கொடுத்துட்டுத்தான் இருக்கு. அதுக்குக் கவலைப்படக் கூடாது. கடந்து போற வாழ்க்கையில் எதுவுமே நிலை இல்லை. எதைப் பார்த்து கனிமொழி பயந்தாங்களோ, எது அவங்களைத் தயங்கவெச்சதோ... அது எல்லாத்​தையும் எதிர்கொள்ளக்கூடிய சக்தி அவங்​களுக்கு இப்போது கிடைத்து இருக்கும்!''
''ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கனிமொழி தவறு பண்ணி இருப்பாங்​கன்னு நம்புறீங்களா?''
''யாருக்கும் நாம ஜட்ஜ்மென்ட் எழுத முடியாது. ஒவ்வொரு மனுஷங்​களோட நல்லது கெட்டது அவங்களோட மனசாட்சிக்கு மட்டுமே தெரியும். எனக்குத் தெரிஞ்சு கனிமொழி, லாப நோக்கம் பார்க்காத அப்பாவி. யாரையும் நம்பவைக்கிறதுக்காக நான் இதைச் சொல்றதா நினைக்கக்கூடாது. அது என்னோட வேலை இல்லை!''
''திருமண முறிவுக்கு அப்புறம் உங்க வாழ்க்கை எங்கெல்லாமோ போயிடுச்சே?''
''செகண்ட் மேரேஜ் பண்ணிக்கிட்டேன். பாதி இத்தாலி, பாதி இங்கிலீஷ்னு பேசிய யுனைடெட் நேஷனின் ஜர்னலிஸ்ட் பெண். குழந்தையும் பிறந்தது. கடவுளைத் தேடிப்போற பயணத்தில் என் குழந்தையும் இருக்குது. எனக்கும் கடவுளுக்குமான பயணம்தான் இந்த வாழ்க்கை. எது கையைவிட்டுப் போனப்பவும், நான் கவலைப்படவில்லை. வசதி வாய்ப்பாக இருந்தாலும் என் குடும்பத்துக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை. கனிமொழியைத் திருமணம் பண்ணினப்ப அத்தனை பத்திரிகையிலும் என்னைத் தூக்கிவெச்சுக் கொண்டாடினாங்க. 'ஏன் இப்படிப் பண்றாங்க?’னு கூச்சப்பட்டேன். திருமண முறிவையும் எழுதித் தள்ளினாங்க. ஏன் கொண்டாடினாங்க... ஏன் திட்டினாங்கன்னு எனக்கு கடைசி வரைக்கும் தெரியாது.
எல்லாத்தையும் விட்டுட்டு இந்தக் காவிக் கோலத்தில் நான் திரியும்போதுகூட, 'யூ அதிபன் போஸ்?’னு அடையாளம் கண்டு சிலர் பேசுவாங்க. 'ஆம்’, 'இல்லை’ன்னு எந்தப் பதிலையும் சொல்லாமல் சிரிச்சுக்கிட்டே போவேன்... போறேன்!''
- இரா.சரவணன்